அடுத்த மாதம் பல்கலைக்கழக நுழைவு தேர்வு
புதுச்சேரி: ரத்து செய்யப்பட்ட புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவு தேர்வினை செப்., 18ம் தேதி முதல் மூன்று நாள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.புதுச்சேரி பல்கலையில் உள்ள பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப்படிப்புகளுக்கு இந்தாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்-லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை பெறப்பட்டன. நாடு முழுவதும் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.இவர்களுக்கான நுழைவு தேர்வு கடந்த 21, 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவு தேர்வினை வரும் செப்டம்பர் 18,19,20 ஆகிய தேதிகளில் நடத்த பல்கலை.,நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்த தகவலை பல்கலைக்கழக www.pondiuni.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.