மாஜி துணைவேந்தருக்கு இரண்டு ஆண்டு சிறை
சென்னை: விமான கட்டண மோசடி வழக்கில், டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைனுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் உள்ள, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையில், 2006 முதல், 2009 வரை, துணைவேந்தராக பணியாற்றியவர், மீர் முஸ்தபா உசைன், ௭௦. இவர், 2008 மே மாதம், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க, பல்கலை சார்பில் விமானத்தில் சென்றுள்ளார். இதற்காக, உயர் வகுப்பு டிக்கெட் முன்பதிவு செய்து, 2.99 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்தப்பட்டு உள்ளது. இதன்பின், அந்த உயர்வகுப்பு டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, சாதாரண இருக்கையாக மாற்றப்பட்டுள்ளது.சாதாரண டிக்கெட்டில் பயணம் செய்து விட்டு, உயர் வகுப்புக்கான டிக்கெட் கட்டணமாக, 2.22 லட்சம் ரூபாய் பணத்தை, பல்கலையில் இருந்து, அவர் கூடுதலாக பெற்றுள்ளார்.இதேபோல, நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்க, விமானத்தில் சென்று வந்ததாக, 7.82 லட்சம் ரூபாயை கட்டணமாக, பல்கலையில் இருந்து, மீர் முஸ்தபா உசைன் பெற்றுள்ளார்.இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி, மீர் முஸ்தபா உசைன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி ஓம் பிரகாஷ், முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசைன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவருக்கு, 2 ஆண்டு சிறை தண்டனையும், 24 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.