அண்ணா பல்கலையை நிர்வகிக்க புதிய கமிட்டி
அண்ணா பல்கலை துணைவேந்தரின் பதவிக்காலம் முடிந்ததால், உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் தற்காலிக நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு பின், அரசின் நேரடி நிர்வாகத்தில், அண்ணா பல்கலை இணைந்து உள்ளது.அண்ணா பல்கலை துணைவேந்தராக பணியாற்றிய சுரப்பாவின் பதவிக்காலம், நேற்று முன்தினம் முடிந்தது. 2018 ஏப்., முதல், மூன்று ஆண்டுகளாக பணியாற்றிய அவர், பல்கலை நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்களை செய்தார்.கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் நேரடி செல்வாக்கை பெற்ற சுரப்பாவிற்கு, பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான உத்தரவு எதுவும், கவர்னர் தரப்பில் பிறப்பிக்கப்படவில்லை.இந்நிலையில், பல்கலை நிர்வாகத்தில் இருந்து, சுரப்பா நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார். மூன்றாண்டுகளுக்கு பின், அண்ணா பல்கலை நிர்வாக பணிகளை, அரசின் உயர் கல்வித்துறை நேரடியாக கையில் எடுத்துள்ளது. பல்கலை நிர்வாகத்தை கவனிக்க அரசின் சார்பில் ஒருங்கிணைப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்களின் சிறப்பு கூட்டம், நேற்று நடத்தப்பட்டது. உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா மற்றும் சிண்டிகேட் பிரதிநிதிகள் பங்கேற்று, நிர்வாக கமிட்டியின் உறுப்பினர்களை தேர்வு செய்தனர்.இது குறித்து பல்கலையின் பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:துணைவேந்தராக இருந்த சுரப்பாவின் பதவிக்காலம் நிறைவு பெற்றது. எனவே பல்கலை நிர்வாகத்தை கவனிக்கும் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்ய, சிண்டிகேட் கூட்டம், உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா தலைமையில் நடத்தப்பட்டது.அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, நிர்வாக ஒருங்கிணைப்பாளராக உயர்கல்வி முதன்மை செயலர் அபூர்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக தகவல் தொழில்நுட்ப துறையின் கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா; அண்ணா பல்கலையின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறையின் தலைவர் ரஞ்சனி பார்த்தசாரதி ஆகியோர், உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.