உள்ளூர் செய்திகள்

நெல்லை பல்கலைக்கழகத்தில் விரைவில் ’வி-சாட்’

திருநெல்வேலி: நெல்லை பல்கலைக்கழகத்தில் ஞானவாணி ரேடியோ சேவையை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் துவக்கிவைத்தார். இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) சார்பில் ஞானவாணி என்ற பெயரில் கல்வி வானொலி சேவையை நடத்திவருகிறது. இத்திட்டத்தின்கீழ் தற்போது தமிழகத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கோவை ஜி.ஆர்.டி.கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் ரேடியோ ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இக்னோவின் வெள்ளிவிழாவை முன்னிட்டு மகாராஷ்டிராவில் புனே, கேரளாவில் கொச்சி, தமிழகத்தில் மதுரை மற்றும் நெல்லை, ஒரிசாவில் கட்டாக் ஆகிய இடங்களில் ஞானவாணி ரேடியோ ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரேடியோ ஸ்டேஷன்களை டில்லியில் நேற்று (நவ. 19ம் தேதி) நடந்த விழாவில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் துவக்கிவைத்தார். நெல்லையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் ஞானவாணி ரேடியோ ஸ்டேஷன் நேற்று முதல் செயல்படுகிறது. இந்த ரேடியோ ஸ்டேஷனில் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை கல்வி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும். இதன் மறு ஒலிபரப்பு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செய்யப்படும். இந்த 4 மணி நேர ஒலிபரப்பில் 3 மணி நேரத்திற்கான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை சி.டி மூலம் இக்னோ வழங்குகிறது. மீதமுள்ள ஒரு மணி நேர நிகழ்ச்சிகள் நெல்லை பல்கலைக்கழக தொடர்பியல் துறையினர் தயாரித்து ஒலிபரப்புகின்றனர். இதில் நெல்லை பல்கலைக்கழக தொடர் கல்வி, பல்கலை வளர்ச்சி திட்டங்கள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளை 105.6 என்ற அலைவரிசையில் சுமார் 80 கி.மீ சுற்றுப்பகுதிக்குள் உள்ள மாணவர்கள் கேட்டு பயன்பெறலாம். நெல்லை பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள ஞானவாணி ரேடியோ ஸ்டேஷன் மேலாளராக அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்ற துரை செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ரேடியோ ஸ்டேஷன் ஒருங்கிணைப்பாளராக தொடர்பியல் துறை தலைவர் கோவிந்தராஜூ செயல்படுகிறார். நெல்லை பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள ஞானவாணி ரேடியோ ஸ்டேஷன் துவக்க விழா கூட்டத்தில் இதில் தலைமை வகித்து துணைவேந்தர் சபாபதி மோகன் பேசியதாவது: மிகவும் குறுகிய காலத்தில் ஞானவாணி ரேடியோ ஸ்டேஷன் பணிகள் துவங்கப்பட்டு, தற்போது செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்கள் கேட்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும். அப்போது தான் எந்த விஷயத்திலும் முழுமை பெறமுடியும். இக்னோ சார்பில் ராணுவ வீரர்களுக்கு அவர்களது திறன்களுக்கு ஏற்ற வகையில் பட்டயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் மூலமாகவும் ராணுவ வீரர்களுக்கு இலவசமாக பல்வேறு பாடங்களை கற்பித்து சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான அனுமதி ஆட்சிமன்றக்குழுவிடம் பெறப்படும். மேலும் வி சாட் எனும் புதிய தொழில் நுட்ப வசதி வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நெல்லை பல்கலையில் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் நெல்லை பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் 64 கல்லூரிகள் இணைக்கப்பட்டு ஒரே நேரத்தில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் கல்வி கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு துணைவேந்தர் சபாபதி மோகன் பேசினார். விழாவில் பல்கலைக் கழக பதிவாளர் மாணிக்கம், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் துரைராஜ், தொடர்பியல் துறை தலைவர் கோவிந்தராஜூ, பி.எஸ்.என்.எல்.பொதுமேலாளர் ராஜூ, ரேடியோ ஸ்டேஷன் உதவி இயக்குனர் சோமாஸ் கந்தமூர்த்தி, தொலை நெறி தொடர் கல்வி இயக்குனர் மணிக்குமார், துறைத்தலைவர்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நெல்லை பல்கலைக்கழக ஞானவாணி ரேடியோ ஸ்டேஷன் மேலாளர் துரை செல்வராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்