மாணவர்கள் போராட்டம்: வனத்துறைக் கல்லூரி மூடல்
இந்நிலையில், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியையும், விடுதியையும் நிர்வாகம் மூடியுள்ளது. மேட்டுப்பாளையத்தில், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு 150 க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் வனவியலில் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., படிக்கின்றனர். தமிழக வனத்துறையில் வனச்சரகர் பணி இடங்களை, வனவியல் படித்த மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவ, மாணவியர் காலவரையின்றி வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த நான்கு நாட்களாக, நூதன முறையில் தொடர் போராட்டங்களை நடத்தினர். மறுஅறிவிப்பு வரும் வரை, கல்லூரி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அனைத்து மாணவ, மாணவியர் கல்லூரி மற்றும் விடுதியை விட்டு மாணவர்கள் காலி செய்யும்படி, கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. விடுதியில் இருந்த மாணவ, மாணவியரை காலி செய்யும்படி கல்லூரி நிர்வாகம் கூறியது. அனைத்து மாணவர்களும் பைகளுடன் ஊர்வலமாக வந்து, போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று, கல்லூரி நுழைவாயிலை முற்றுகையிட்டனர். கல்லூரியின் உள்ளே சட்டம் ஒழுங்கு பிரச்னையைத் தவிர்க்க, போலீசார் குவிக்கப்பட்டனர்.வனக்கல்லூரி டீன் கோவிந்தராவ், மாணவர்களின் போராட்டம் குறித்து மேட்டுப்பாளையம் தாசில்தார் சுகுமாரன், டி.எஸ்.பி., மாரியப்பன் ஆகியோருடன் ஆலோசித்தார். கல்லூரி முதல்வர் புகார் செய்தால் எந்த நேரத்திலும் மாணவர்கள் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதனால், கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 2.00 மணிக்கு, சின்னராஜ் எம்.எல்.ஏ., மற்றும் அ.தி.மு.க., வினர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கல்லூரி டீன் கோவிந்தராவுடன் பேசினர். கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத், வனக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவர் பிரதிநிதிகளை பேச்சுக்கு வரும்படி அழைத்தார்; பிரதிநிதிகள் கோவை சென்றனர். கல்லூரி விடுதியில் எந்த உணவும் கொடுக்காததால், மாணவ, மாணவியர் பட்டினியாகவே போராட்டத்தை தொடர்ந்தனர். பேச்சு நடத்த கோவை சென்ற மாணவர்கள் திரும்பும்வரை, அதே இடத்தில் போராட்டம் தொடரும் என, அவர்கள் தெரிவித்தனர்.