தமிழ் மொழியை நாடும் பீகார் மாணவர்கள்
வால்பாறையில் உள்ள தேயிலை எஸ்டேட்டுகளில், தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக அசாம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வால்பாறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மாணிக்கா எஸ்டேட்டில் பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் குழந்தைகள் இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழ் மொழி பாடம் படிக்கின்றனர். மாணிக்கா ஓ.சி.,ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 31 பேர் படிக்கின்றனர். இதில் 11 மாணவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். பள்ளி தலைமை ஆசிரியை மேரி கூறியதாவது: பிற மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளானாலும், தமிழ் மொழி கற்பதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த மாணவர்களிடம் இருந்து வகுப்பு தோழர்கள் இந்தி கற்றுக் கொள்கின்றனர், என்றார்.