காளான் வளர்ப்பு பயிற்சி:பல்கலை நிர்வாகம் ஒப்புதல்
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலை, காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சார்பில், ஆன்லைன் முறையில் காளான் வளர்ப்பு பயிற்சி விரைவில் வழங்கப்படவுள்ளது. இதற்கான ஒப்புதலை, பல்கலை நிர்வாகம் அளித்துள்ளது.ஒரு நாள் காளான் வளர்ப்பு பயிற்சிக்கு, 590 ரூபாய் கட்டணமும், மூன்று நாள் பயிற்சிக்கு, 5,900 ரூபாய், ஐந்து நாள் பயிற்சிக்கு, 10,030 ரூபாயும், கட்டணமாக செலுத்த வேண்டும். நேரடி பயிற்சியில் பலர் பங்கேற்க முடியாத சூழலில், அனைவரும் பயன்பெறும் வகையில் ஆன்லைன் பயிற்சிக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக பல்கலை சாராத, பிற கல்லுாரி மாணவர்களுக்கு, காளான் வளர்ப்பு 10, 15 நாட்கள் பிரிவில் நேரடியாக தொழில்முனைவோர் திறன் பிரிவில் வழங்க பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.கல்லுாரிகள் நேரடியாக பல்கலையை அணுகலாம். இதற்காக, மாணவர் ஒருவருக்கு 10 நாளுக்கு 5,900 ரூபாய், 15 நாட்களுக்கு 7,080 ரூபாயும் கட்டணம் பெறப்படுகிறது. ஆன்லைன் வழி பயிற்சி விரைவில் துவங்கவுள்ள சூழலில், முன்பதிவு செயல்பாடுகள் துவக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள், 0422-6611336/6611226 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.