அண்ணா பல்கலைகளில் நாக் கமிட்டி ஆய்வு
அரசு பல்கலைகளான சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலை சார்பில், தேசிய அங்கீகார மற்றும் மதிப்பீட்டு குழுவான நாக் தகுதி சான்றிதழ், கடந்த, 2014ல் பெறப்பட்டது. இரண்டு பல்கலைகளும், ஏ கிரேடு சான்றிதழை பெற்றது. இந்த சான்றிதழ், 2019ம் ஆண்டுடன் காலாவதியாகி விட்டது. அதன்பின், பல்வேறு வகை முயற்சிகள் மேற்கொண்ட பிறகும், நாக் அங்கீகாரம் பெறப்படவில்லை. இந்நிலையில், இரண்டு பல்கலைகளும் நாக் கமிட்டிக்கு முறையாக விண்ணப்பித்து, தங்கள் உள் கட்டமைப்பு வசதிகளை ஆவணப்படுத்தியுள்ளன. இதையடுத்து, பெங்களூரில் இருந்து நாக் குழுவினர், சென்னை வந்து, அண்ணா பல்கலை மற்றும் சென்னையில் நேரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.சென்னை பல்கலையில் நாளை வரையிலும், அண்ணா பல்கலையில் வரும், 13 வரையிலும் ஆய்வு நடக்கிறது. அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், சென்னை பல்கலை துணைவேந்தர் கவுரி ஆகியோரது தலைமையிலான பேராசிரியர் குழு, நாக் கமிட்டிக்கு தங்கள் பல்கலை உள்கட்டமைப்புகளை நேரடியாக சுற்றி காட்டுகின்றனர். சென்னை பல்கலையில், 9 ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சியும் நடத்தாமல் இருந்த, புகழ்பெற்ற பாரம்பரியமான செனட் அரங்கில், மாணவ, மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதை நாக் கமிட்டியினர் பார்வையிட்டனர்.