உள்ளூர் செய்திகள்

பதவி உயர்வின்றி தவிக்கும் சாலை ஆய்வாளர்கள்

விருதுநகர்: தமிழகத்தில் டிப்ளமோ கல்வி தகுதி உள்ள சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்படுவதால் மன உளைச்சலில் உள்ளனர், என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொது செயலாளர் மாரிமுத்து கூறினார். மேலும் அவர் கூறியதாவது: தமிழக நெடுஞ்சாலைத்துறையில் டிப்ளமோ சிவில் கல்வி தகுதி உள்ள சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு ஆண்டுதோறும் வழங்கப்பட வேண்டும். ஆனால் பல ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 2015ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து 2017ல் தமிழகம் முழுவதும் இருந்து தகுதியானவர்கள் பட்டியல் நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனரால் அ.தி.மு.க., ஆட்சியில் பெறப்பட்டது. ஆட்சி முடியும் வரை பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 2021ல் ஆட்சி மாறியது. ஆனால் தற்போது வரை தி.மு.க., ஆட்சியிலும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பதவி உயர்வு கிடைக்காமல் மன உளைச்சலோடு பணியாற்றி வருகின்றனர். இது குறித்து தகுதியானவர்கள் சென்னை சென்று நெடுஞ் சாலைத்துறை தலைவர் முதன்மை இயக்குனரிடம் முறையிட்டும் பலனில்லை. இதனால் இந்த அரசுக்கு அனைத்து பகுதி அரசு ஊழியர்கள் மத்தியில் கடுமையான மவுன கோபம் இருந்து வருகிறது. அரசில் உள்ள சில உயர் அலுவலர்கள் உள் நோக்கத்தோடு அரசுக்கு எதிராக ஊழியர்களை மறைமுகமாக போராட்டத்திற்கு தள்ளி வருகின்றனர். இதன் உண்மை நிலவரத்தை அறிந்து தமிழக முதல்வர் கூடுதல் கவனம் செலுத்தவில்லை என்றால் தி.மு.க., அரசுக்கு எதிரான மனநிலைக்கு ஊழியர்கள் செல்வதை தடுக்க முடியாது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்