டான்சானியாவில் நவம்பரில் சென்னை ஐ.ஐ.டி., வளாகம்
புதுடில்லி: டான்சானியா நாட்டின் சான்சிபார் நகரில் வரும் நவம்பரில் சென்னை ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப நிறுவன வளாகம் திறக்கப்பட உள்ளது.கிழக்கு ஆப்ரிக்க நாடான டான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹாசன், நான்கு நாட்கள் அரசு முறைப்பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ளார். புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். இந்நிலையில், புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் நேற்று அளிக்கப்பட்டது. இந்த கவுரவத்தை பெறும் முதல் பெண் என்ற பெருமையை ஹாசன் பெற்றுள்ளார்.அந்த நிகழ்ச்சியில், டான்சானியா அதிபர் பேசியதாவது:இந்தியா மீது காதல் கொள்ளாதவர்கள் இருக்க முடியாது என இந்த உலகமே கூறுகிறது. அது, இந்திய பாடலாக இருக்கட்டும்; இந்திய சினிமாவாக இருக்கட்டும் அல்லது இந்திய உணவாக இருக்கட்டும்; அதன் அழகில் மயங்காமல் தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:டான்சானியா நாட்டின் சான்சிபார் நகரில் வரும் நவம்பரில் சென்னை ஐ.ஐ.டி., வளாகம் திறக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த திறன் மேம்பாட்டு நிறுவனங்களை டான்சானியா மற்றும் பிற ஆப்ரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்ல, மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.