உள்ளூர் செய்திகள்

காற்றோடு போச்சு கல்வி இயக்குனர் உத்தரவு!

கோவை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் பல பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஆண்டு தோறும் கடும் போட்டி நிலவுகிறது. பள்ளி முன் பெற்றோர் விடிய, விடிய வரிசையில் காத்திருந்து விண்ணப்பம் பெறும் சம்பவங்களும் நடக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் மாணவ, மாணவியரிடம் பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றன. விண்ணப்ப படிவத்திற்கு மட்டும் 200 முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கின்றன. மே மாதத்துக்கு முன்னரே அட்மிஷன் முடித்து, பெற்றோரை விரட்டியடிக்கின்றன.இது தொடர்பான புகார்கள் அதிகரித்ததை தொடர்ந்து, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனரகம் பல்வேறு நிபந்தனைகளை பள்ளிகளுக்கு விதித்தது. பள்ளியில் பிரி கே.ஜி., எல்.கே.ஜி., மற்றும் யூ.கே.ஜி., ஆகிய வகுப்புகளுக்கான அட்மிஷன் மே மாதம் தான் நடத்தப்பட வேண்டும். அதற்கு முன் நடக்கும் அட்மிஷன் செல்லாது; உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்&' என்று சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, அனைத்து மெட்ரிக் பள்ளிகளுக்கும் தெரிவித்திருந்தது. ஆனால், கோவை புறநகரில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் இந்த உத்தரவை கண்டுகொள்ளவில்லை. அன்னூர், கோவில்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் மாணவர்கள் அட்மிஷனுக்கான பணி கடந்த வாரமே துவங்கி விட்டது. பல பள்ளிகளில் இதற்கான அறிவிப்பு, பள்ளியின் அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டுள்ளது; தற்போது, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பம் பெறுவோரிடம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நுழைவுத் தேர்வு நடத்தி சேர்க்கையை முடிக்க பள்ளிகள் முடிவு செய்துள்ளன. இது குறித்து, கல்வித்துறை அதிகாரி கூறுகையில்,மே மாதத்துக்கு முன் மாணவர் சேர்க்கையில் ஈடுபடும் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்