தமிழக கல்லூரிகளில் கல்வித்தரம் உயர்வு: ஸ்டாலின்
கோவை நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லூரியில் புதிய கட்டட திறப்பு மற்றும் மாணவர்களுக்கான பணி நியமன உத்தரவு வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் பழனிசாமி தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் அஜித்குமார் லால் மோகன் வரவேற்றார்.துணை முதல்வர் ஸ்டாலின் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசியதாவது: கிராமப் பகுதியிலுள்ளோர் கல்வி பெறும் வகையில் அனைவரும் பாடுபடவேண்டும்; அக்கல்வி தரமுள்ளதாக இருக்கவேண்டும். இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் கல்வித்துறைக்கு இரு அமைச்சர்கள் உள்ளனர். மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்துறைகளைப் போல, கலை அறிவியல் பாடங்களுக்கும் முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.கடந்த 2006-07ம் ஆண்டு வரை அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் கட்டணம் 12 ஆயிரத்து 550 ரூபாயாக இருந்தது. தி.மு.க., ஆட்சி வந்தவுடன் 7,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 2008-09ம் ஆண்டு முடிய ஏழு இடங்களில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. பெண்ணாகரம் தொகுதியிலும் கலை, அறிவியல் கல்லூரி விரைவில் துவக்கப்படும். இந்தியர்கள் வெளிநாட்டுக்கு சென்று படிக்கும் காலம் மாறி, வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது; கல்வித்தரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமே இதற்கு காரணம். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.வளாகத்தேர்வில் தேர்வான 140 மாணவர்களுக்கு பணி நியமன உத்தரவை வழங்கினார். கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார். விழாவில், சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் சாமிநாதன், பாரதியார் பல்கலை துணைவேந்தர் சாமிநாதன், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் நிறுவன தலைவர் பாலசுப்ரமணியம், தொழிலதிபர் சந்திரன், முதன்மை கட்டட வடிவமைப்பாளர் ரமணிசங்கர், கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அசோக்குமார் லால் மோகன், எட்வின் அலெக்ஸாண்டர், நிர்வாக அறங்காவலர் லால்மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.