பொதுத்தேர்வு: பறக்கும் படைகளுக்கு புதிய உத்தரவு
அரசு தேர்வுத் துறையால் நடத்தப்படும் தேர்வுகளில் முதன்மையானது மேல்நிலை பொதுத் தேர்வு. இத்தேர்வு, எவ்வித ஒழுங்கீன செயலுக்கும் இடமின்றி நடப்பது அவசியம். தேர்வின் போது ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பிடிப்பது எந்தளவு முக்கியமானதோ, அதே அளவிற்கு அவர்களது குற்றத்தை நிரூபிப்பதும் முக்கியமானது.பறக்கும் படையால் பிடிபட்டு, தண்டனை பெற்ற சில மாணவர்கள், கோர்ட்டுக்கு செல்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. சில வழக்குகளில் போதிய ஆதாரமின்மையாலும், பறக்கும் படையினரின் அறிக்கை இணைக்கப்படாத காரணத்தாலும், துறையின் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதுடன், வழக்கு செலவையும் மாணவர்களுக்கு வழங்கும்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையை தவிர்க்கும் வகையில், பறக்கும் படையினர் புதிய நடைமுறையை பின் பற்றும்படி, தேர்வுத்துறை புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.தேர்வறையில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டார் என உறுதியாக தெரிந்த பின்பே, எழுத்துமூலமான வாக்குமூலம் பெற்று, அன்றைய தேர்வை எழுதுவதில் இருந்து தடை செய்யப்பட வேண்டும்.மாணவரின் இருக்கைக்கு அருகிலோ, வெளியிலோ, சுவரிலோ, தரையிலோ துண்டு தாள்கள் இருத்தல் போன்ற காரணங்களுக்காக மாணவர்களை பிடிப்பதை தவிர்த்தல் வேண்டும்.பிடிபடும் மாணவர்கள் குறித்த அறிக்கை முழுமையாக அளிக்கப்பட வேண்டும்.மாணவர் ஈடுபடும் ஓழுங்கீனச் செயலின் தன்மை தெளிவாகவும், முழுமையாகவும் குறிப்பிடப்பட வேண்டும். மேலும், பிடிபடும் மாணவரின் விடைத்தாளுடன் கண்காணிப்பாளர் இணைத்து அனுப்ப வேண்டியவை குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பிடிபடும் மாணவரின் விடைத்தாள், வினாத்தாள், மாணவர் வைத்திருந்த துண்டுத்தாள் பெறப்படுவதுடன், அதில் சம்பந்தப்பட்ட மாணவரின் கையொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.மாணவரின் வாக்குமூலம் பெறப்பட வேண்டும். மாணவர் தரமறுத்தால், அதுகுறித்து அறிக்கையில் குறிப்பிட வேண்டும். துண்டுத்தாள் பார்த்து எழுதினால், அவ்வாறு எழுதப்பட்ட பகுதியை விடைத்தாளிலும், துண்டுத்தாளிலும் சிவப்பு மையால் கோடிட்டு காட்டுதல் வேண்டும்.விடைத்தாள் மாற்றம் செய்திருந்தால், மாற்றம் செய்யப்பட்டவரின் பதிவெண்ணும், விடைத்தாள் பெற்றவரின் பதிவெண்ணும் குறிப்பிடுதல் வேண்டும். விடைத்தாளில் எந்தெந்த வினாக்களுக்கு விடை எழுதப்பட்டுள்ளது என சிவப்பு மையால் குறிப்பிட வேண்டும்.அறையின் இருக்கை மாதிரி வரைபடம். ஒழுங்கீனச் செயலை கண்டுபிடித்தவரின் வாக்குமூலம் (மாணவரின் தவறை தெளிவாக குறிப்பிட வேண்டும்). இந்த ஆவணங்கள் அனைத்தையும், துறை அலுவலர் முன்னிலையில் முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.அந்த ஆவணங்கள் முறையாக, அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பப்படுகிறதா என கண்காணிக்கும் பொறுப்பு துறை அலுவலரையே சாரும், என அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.