கல்லுாரி முதல்வருக்கு பணி நீட்டிப்பு இல்லை
சென்னை: கலாஷேத்ரா பவுண்டேஷன் கீழ், ருக்மணிதேவி நுண்கலை கல்லுாரி இயங்குகிறது. இதன் முதல்வராக, பகல ராமதாஸ் என்பவர் உள்ளார்.இவரது பணி காலம், வரும் 31ல் முடிகிறது. இக்கல்வியாண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்க கோரி, கலாஷேத்ரா பவுண்டேஷன் தலைவர் மற்றும் மத்திய கலாசாரத்துறை செயலருக்கு மனு அளித்தார். அம்மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, பணி நீட்டிப்பு வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனு, நீதிபதி பரத சக்ரவர்த்தி முன், விசாரணைக்கு வந்தது.மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் சந்திரசேகரன், கலாஷேத்ரா சார்பில் வழக்கறிஞர் நித்திய வைபவ் ஆஜராகி, கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என எந்த விதிகளும் இல்லை என்றனர். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.