பல்புகளில் கண் கவர் வண்ண ஓவியங்கள்
பாகல்கோடு: சுவர், காகிதம் உள்ளிட்டவற்றில் ஓவியங்கள் வரைவதை பார்த்திருக்கிறோம். கண்ணாடி பாட்டிலுக்குள் ஓவியங்கள் வரையும் கலைஞர்களும் உள்ளனர். ஆனால் வாலிபர் ஒருவர், கண்ணாடி பல்புகளுக்குள் ஓவியம் வரைந்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார்.அனைவருக்குள்ளும் ஏதாவது ஒரு திறமை மறைந்திருக்கும். சிலர் மட்டுமே அதை வெளிப்படுத்தி, புகழ் பெறுவர்; மற்றவரை ஆச்சரியப்பட வைப்பர். அவர்களில் விஜய் பவாரா, 35, என்பவரும் ஒருவர். அவருக்குள்ள திறமை அசாத்தியமானது.கண் கவர் ஓவியங்கள்பொதுவாக சுவர்கள், காகிதங்கள், புத்தகங்கள், போர்டுகள் உள்ளிட்டவற்றில் வண்ணமயமான ஓவியங்கள் வரைவது சகஜம். சிலர் பாட்டிலுக்குள்ளும் ஓவியம் வரைவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இவர் கண்ணாடி பல்புகளுக்குள் ஓவியம் வரைந்து அசத்துகிறார்.பாகல்கோட்டின், ஹுன்னுார் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய் பவாரா. சிறு, சிறு பல்புகளில் கண் கவர் ஓவியங்கள் வரைகிறார். 60 வாட்ஸ், 200 வாட்ஸ் பல்புகளில், அழகான விநாயகர் உருவம், தாஜ்மஹால், கோல்குமட்டா, விதான்சவுதா, கூடல சங்கமா, அலமாட்டி அணை, ஜமகண்டி அரண்மனை, சிவலிங்கம், மாட்டு வண்டி, கணினி, கால்குலேட்டர் என, பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார்.பாட்டிலில் மாட்டு வண்டி வறைந்த ஒரு கலைஞரை கண்ட விஜய்க்கு, பல்புகளில் ஓவியம் வரையும் ஆர்வம் ஏற்பட்டது. முதலில் மாட்டு வண்டி வரைந்தார். அதன் பின் கலையை வளர்த்துக் கொண்டார். தற்போது 200க்கும் மேற்பட்ட பல்புகளில் ஓவியங்களை வரைந்துள்ளார். இவரது கலைத்திறனை அடையாளம் கண்டு, பல்வேறு அமைப்புகள் இவரை கவுரவித்துள்ளன.கலா அபரஞ்சி, சாணக்ய விக்ரமாதித்யா என, மாநில அளவிலான விருதுகளும் பெற்றுள்ளார். ஐந்து முறை லிம்கா விருது பெற்று சாதனை செய்துள்ளார். ஏழை கலைஞரான இவருக்கு போட்டோகிராபியிலும் ஆர்வம் அதிகம்.- நமது நிருபர் -