தினமலர் செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல்வர்
சென்னை: தினமலர் ஆக்கப்பூர்வமாக பல செய்திகளை வெளியிடுவதுடன், ஆட்சியில் நடக்கும் நல்லதையும், விமர்சனத்தையும் வெளிப்படையாக செய்து வருகிறது என அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.தினமலர் நாளிதழ் சார்பில், சென்னையில் நடந்த, மலர் மகுடம் - சென்னை செல்வங்கள் நுால் வெளியீட்டு விழாவில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:சென்னை செல்வங்களுக்கு மலர் மகுடம் சூட்டும் விழா. பொதுவாக அனைத்து நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கப்படும்; புகைப்படம் எடுக்கப்படும். அத்துடன் அந்த நிகழ்ச்சி முடிந்து விடும். தினமலர் நடத்தும் இந்த நிகழ்ச்சியில், விருது வழங்கப்பட்டது. புகைப்படம் எடுக்கப்பட்டது. விருதுக்கு உரியவர்களின் சிறப்புகள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது.இங்கு விருது வழங்கப்பட்ட, 19 பேரின் சிறப்புகள் ஆவணப்படுத்தப்பட்டு, மலர் மகுடம் என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு விருது பெற்ற, 19 பேருடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் உள்ளோம்.மிக சிறந்த சாதனையாளர்களை தேர்வு செய்து, தினமலர் விருது வழங்குகிறது. விருது பெற்ற அனைவரையும் பாராட்டுகிறேன். இது ஆவணப்படுத்தப்பட்டது மிகச் சிறப்பு. எந்த செய்தியாக இருந்தாலும், அது ஆவணப்படுத்தப்பட வேண்டும். இதைத்தான் பத்திரிகைகள் செய்கின்றன.நம் வாழ்வு, நாம் வாழ்ந்த விதம், நாம் செய்த பணிகள் அனைத்தையும் ஆவணப்படுத்தினால், எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும். நான் பெரிய எழுத்தாளன் அல்ல. ஆனாலும், நான் செய்த செயல்களை, சிறிய புத்தகமாக வெளியிட்டு வருகிறேன். என் ஐந்து ஆண்டுகால மேயர் பொறுப்பை, புத்தகமாக எழுதி வெளியிட்டேன்.என் மாரத்தான் அனுபவங்களை, ஓடலாம் வாங்க என்ற புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளேன். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளேன். இரண்டு ஆண்டுகளில், கொரோனா பேரிடர் அனுபவத்தை பதிவு செய்வதற்காக, கொரோனாவே கோ ரன் அவே என்ற புத்தகம் எழுதி முடித்துள்ளேன். இது ஒரு மாதத்தில் வெளி வர உள்ளது.தினமலர் நிர்வாகிகள் பெயரை பார்த்தால், நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இவர்கள் அனைவருமே, அவர்கள் தாத்தா, பாட்டி பெயர்களை தொடர்ச்சியாக வைத்துக் கொண்டுள்ளனர். ஒரு குடும்பம் தொடர்ந்து, தங்கள் முன்னோர்களின் நினைவை, நிஜத்தில் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றனர்.அதேபோல் பத்திரிகையை வழி வழியாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இது பாராட்டுக்குரிய விஷயம். தினமலரில் வரும் செய்திக்கு, கருணாநிதியும், முதல்வர் ஸ்டாலினும் முக்கியத்துவம் தருவதை, நேரில் உணர்ந்தவன்.நான் மேயராக இருந்தபோது, தினமலரில் ஏதேனும் செய்தி வந்தால், கருணாநிதி அதிகாலை 5:00 மணியில் இருந்து 6:00 மணிக்குள், தொலைபேசியில் என்னிடம் பேசுவார். தினமலரில் இத்தனையாவது பக்கத்தில் இந்த செய்தி வந்துள்ளது. உடனடியாக சரி செய்து, அந்த நிர்வாகத்துக்கு என்ன செய்துள்ளோம் என்பதை பதிவிடு என்பார்.உடனடியாக செய்து, அந்த செய்தியை அனுப்புவோம். அந்த செய்தியை, தினமலர் செய்தி எதிரொலி என வெளியிடுவர். தற்போதைய முதல்வர் ஸ்டாலின், அதை பின்பற்றுகிறார். திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட ஆய்வுக் கூட்டத்தில் பேசும் போது, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் முக கவசத்துக்கு பதிலாக, டீ கப் உபயோகப்படுத்தப்பட்டது தொடர்பாக, தினமலரில் ஒரு செய்தி பார்த்தேன். ஏன் அந்த நிலை ஏற்பட்டது எனக் கேட்டார்.முதல்வரும், தினமலர் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, தீர்வு காண்பதில் உறுதியாக இருப்பதை அன்று அறிந்தேன். நாளிதழ்களில் வரும் முக்கிய செய்திகளை பார்த்து, பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, முதல்வர் முனைப்பு காட்டுகிறார். தினமலர் ஆக்கப்பூர்வமாக பல செய்திகளை வெளியிடுவதுடன், ஆட்சியில் நடக்கும் நல்லதையும், விமர்சனத்தையும் வெளிப்படையாக செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.