போதை பழக்கத்தை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த குழு
சென்னையில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் போதைப் பொருட்கள் தாராளமாக புழங்குகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த, பல் துறைகள் ஒருங்கிணைந்த குழு அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சி மேயராக பிரியா பொறுப்பேற்ற போது, 2022ல் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது ஆசிரியர்கள், பல புகார்களை முன்வைத்தனர். குறிப்பாக, மாநகராட்சி பள்ளிகளில் தாராளமாக கஞ்சா, கூல்லிப், சிகரெட், மாவா, மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்கள் புழங்குகின்றன.போதைக்கு அடிமையாகும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மற்றொரு காரணம், போதை பொருட்களை மாணவர்களே பள்ளிகளில் விற்பனையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.இதனால், படிப்பில் ஆர்வம் குறைவதோடு, ஆசிரியர்களாகிய எங்களையும் அவர்கள் மதிப்பதில்லை. தவிர, பல்வேறு சமூக விரோத செயல்களிலும் அவர்கள் ஈடுபடுவதாக, ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர். ஆனால், ஆசிரியர்களின் புகாரை பரிசீலிக்க, மாநகராட்சி பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.இதற்கிடையே, சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில், வார்டு வாரியாக சுகாதார பேரவை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேளச்சேரியில் நடந்த சுகாதார பேரவை கூட்டத்திலும், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடையே உள்ள போதைப் பழக்கம் குறித்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்.அதில், அவர்கள் குறிப்பிட்டதாவது:சென்னையை பொறுத்தவரை பரவலாக போதை பொருட்கள் கிடைக்கின்றன. இதனால், மாணவர்களின் போதைப் பழக்கத்தை விடுவிக்க கடுமையாக போராட வேண்டியுள்ளது. பல மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல் துறை எவ்வித நடவடிக்கையும் பெரிதாக எடுப்பதில்லை.இவ்வாறு அவர்கள் குற்றஞ்சாட்டினர்.இதையடுத்து, மாநகராட்சி, காவல் துறை, கல்வித் துறை, சுகாதாரத் துறை, உணவு பாதுகாப்பு துறை, மதுவிலக்கு பிரிவு, போதை மறுவாழ்வு மையங்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.இக்குழுவினர், பள்ளி, கல்லுாரிகள் அளவில் கண்காணித்து, போதை பழக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு முறையான &'கவுன்சிலிங்&' அளித்து, அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடுவர். விரைவில் அதற்கான குழு அமைக்க, தமிழக அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாணவர்களிடம் அதிகரித்துள்ள போதைப் பழக்கத்தை தடுக்க, வாரந்தோறும் போலீசார், தலைமை ஆசிரியர்களிடம் பேசுகின்றனர். இப்பேச்சு, பெயரளவுக்கு தான் நடக்கிறது. பெரும்பாலான பள்ளிகளில் சென்று, போலீசார் ஆய்வு செய்வதும் இல்லை; கண்காணிப்பதும் இல்லை. போதைப் பழக்கம் குறித்து போலீசாரிடம் தெரிவித்தாலும், தடுப்பு நடவடிக்கை தீவிரமாக இல்லை.காவல் நிலையத்தை மையப்படுத்தி குழு அமைத்து கண்காணித்தால், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கூறும் புகார்களை வைத்து, தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தலாம். அதேபோல், கல்வி நிறுவனங்களிலும் குழு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.பள்ளிகளில் இயல்பாகவே, மாத்திரை, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கிடைக்கும். உடன் படிக்கும் சக மாணவரே, அந்த விற்பனையில் ஈடுபடுவர். 5 கிராம் கஞ்சா 350 ரூபாய்; மாத்திரை 500 ரூபாய் உள்ளிட்ட விலைகளில் விற்பனை செய்வர். சக மாணவர் யாரிடமிருந்து, போதைப் பொருட்களை வாங்கி விற்பனையில் ஈடுபடுகிறார் என்று கேட்டால் சொல்ல மாட்டார்கள். பொருள் வேண்டுமென்றால் வாங்கி கொள்ளலாம். மற்ற விபரம் தெரியாது. அதேநேரம் போதைப் புழக்கம், பள்ளி, கல்லுாரி அளவில் தொடர்ந்து வருகிறது. - முன்னாள் பள்ளி மாணவர்.