போக்குவரத்து தொழிலாளரின் குழந்தைகளுக்கு இலவச பயணம்
போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகள், கல்வி தொடர்பான பயணங்களுக்கு, எஸ்.இ.டி.சி., அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில், 10 முறை இலவசமாக பயணிக்கலாம்.இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் இளங்கோவன் அறிக்கை:அனைத்து அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகள், மருத்துவம், இன்ஜினியரிங், கலை அறிவியல், டிப்ளமோ உள்ளிட்டவை படிப்போருக்கு, இருப்பிடத்தில் இருந்து கல்லுாரி வந்து செல்ல, ஆண்டுக்கு, 10 முறை இலவசமாக செல்லலாம்.இதற்கு அனுமதி சீட்டு வழங்கி, எஸ்.இ.டி.சி.,யின் சூப்பர் டீலக்ஸ் உள்பட அனைத்து போக்குவரத்து பஸ்களில் பயணித்து வந்தனர். ஆனால் சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்கள் என இயக்கப்பட்டதால் மாணவ, மாணவியர், அல்ட்ரா டீலக்ஸில் பயணித்தால் இரு பஸ்களின் கட்டணத்துக்குரிய வித்தியாச தொகையை செலுத்தி பயணித்தனர்.தற்போது எஸ்.இ.டி.சி.,யில் சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் முற்றிலும் மாற்றம் செய்து அல்ட்ரா டீலக்சாக இயக்கப்படுகிறது. அதனால் இனி அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில் போக்குவரத்து தொழிலாளர்களின் பிள்ளைகள், கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.- நமது நிருபர் -