அமைச்சர் உதயநிதியிடம் ஆசிரியை அளித்த புகார்
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் உதயநிதியிடம், பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.மிக்ஜாம் புயல் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் உதயநிதி பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார். சென்னை வேளச்சேரி பகுதியை பார்வையிட வந்த அமைச்சர் உதயநிதியிடம் பெண் ஆசிரியை ஒருவர் தன் வீடும், தான் வசிக்கும் ராஜரத்தினம் நகர் இரண்டாவது பிரதான தெருவில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதையும் எடுத்து கூறினார்.நாங்கள் வசிக்கும் பகுதியில், தண்ணீர் சூழ்ந்துள்ளது. அங்கு எந்த பணிகளும் நடக்கவில்லை என்ற புகாரை ஆவேசமாக தெரிவித்தார். ஆசிரியை கூறிய பகுதியில் மோட்டார் பம்பு வாயிலாக, தண்ணீரை அகற்றுங்கள் என, அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் உத்தரவிட்டனர்.அமைச்சர் உதயநிதியிடம் தொடர்ந்து பேசுவதற்கு பெண் ஆசிரியை முன் வந்த போது, நேரமில்லை எனக் கூறி, அமைச்சர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இந்த வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவியது.