உள்ளூர் செய்திகள்

புத்தகத்துக்கான தடையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: புத்தகத்துக்கு தடை விதித்ததை எதிர்த்த, ரிட் வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையது இல்லை என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு, மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்துக்கு தடை விதித்து, பறிமுதல் செய்ய, 2015ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, நுால் ஆசிரியர் குழந்தை ராயப்பன், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். புத்தகத்தில், ஜாதி ரீதியாக எதுவும் இல்லை எனவும், தடையை நீக்கவும் கோரியிருந்தார்.வழக்கு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், சி.வி.கார்த்திகேயன், தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. புத்தகத்துக்கு தடை செய்ததை எதிர்த்து, 2 மாதங்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ரிட் வழக்காக தாக்கல் செய்ய முடியாது என்றும், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து, ரிட் வழக்காக தாக்கல் செய்த இந்த மனு, விசாரணைக்கு ஏற்புடையதா என்பது குறித்து விளக்கம் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். தடை விதிப்பதற்கு முன், தங்கள் தரப்பை கேட்காததால், இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது. அரசின் தடை உத்தரவு, அடிப்படை உரிமையான கருத்து சுதந்திரத்துக்கு விரோதமாக உள்ளது. மனு, விசாரணைக்கு ஏற்புடையது தான் என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இரு தரப்பு வாதங்களுக்கு பின், இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கு, விசாரணைக்கு ஏற்புடையது இல்லை என தெரிவித்து, தள்ளுபடி செய்து, நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்