வாழ்வியல் முன்னேற்றத்திற்கு அறிவியல் சார்ந்த செயற்கைகோள்
ஊட்டி: அறிவியல் சார்ந்த செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருவதால், இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள், மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமைந்து வருகிறது. என, சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தெரிவித்தார்.ஊட்டி ஜெ.எஸ்.எஸ்., பார்மசி கல்லூரியில், அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், விண்வெளியில் இந்தியா என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கில் சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் பங்கேற்று, மாணவர்களிடம் பேசினார்.நிருபர்களிடம் கூறுகையில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை ஊக்கவிக்கும் வகையிலும், விண்வெளி அறிவியல் குறித்து அறிந்து கொள்ளும் வகையிலும், இந்நிகழ்ச்சி நடத்தபடுகிறது. இஸ்ரோ சார்பில், தகவல் தொடர்பு, வானிலை மற்றும் ஜி.பி.ஆர்.எஸ், செவ்வாய் கிரகம், ஆகியவற்றை ஆய்வு செய்ய கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அறிவியல் சார்ந்த செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு வருவதால், இவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள், மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக அமைந்து வருகிறது.சந்திராயன் 3 செயற்கைக்கோள் லேண்டர் மற்றும் ரோவர் அடங்கியது. தற்போது, அதன் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டது. இந்த செயற்கைக்கோள் விண்ணிற்கு செலுத்தப்பட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறியுள்ளது.இந்த திட்டத்தில் மற்றொரு சாதனையாக லேண்டர் எந்த இடத்தில் தரையிறக்கபட்டதோ, அந்த இடத்தில் இருந்து, வேறொரு இடத்திற்கு அதே எஞ்சின் மூலம் கொண்டு செல்லப்பட்டு தரையிறக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்பிட்டர் நிலவின் சுற்றுவட்ட பாதையில் இருந்து மீண்டும் பூமிக்கு கொண்டுவரப்பட்டது.இதில் இருந்து பெறப்படும் தகவல்கள் பிற திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.