மாடித்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆசிரியர்
போடி: மனித இனம், விலங்குகள், தாவரம், மரங்கள் வளர்ச்சிக்கு நீர் அவசியம். கோடையில் சுட்டெரிக்கும் வெயிலால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனை முன்கூட்டியே அறிந்த மரங்கள் நீரின் தேவையை குறைக்கும் வகையில் இலைகளை உதிர்கின்றன. ஆனால் மனிதராகிய நாம் தடுப்பணைகள் கட்டி மழை நீரை சேமிக்காமல் வெயில் காலங்களில் தண்ணீருக்காக தவிக்கின்றோம். இதற்காக மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதன் மூலம் பூமி பசுமையாக மாறுவதோடு, நல்ல மழை கிடைத்து வளம் கொழிக்க செய்யும். நாம் வாழும் பகுதி தூய்மையாகவும், வீடுகள், தோட்டங்களில் மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். வீட்டை சுற்றி இடம் இல்லா விட்டாலும் மாடித்தோட்டம் அமைத்து, மருத்துவ குணம் வாய்ந்த, இயற்கை காய்கறி செடிகள் வளர்ப்பதன் மூலம் ஆக்சிஜன் தொடர்ந்து அதிகளவில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன என தனது மாணவர்கள், நண்பர்கள், உறவினர்களிடம் மாடித்தோட்டம் அமைப்பதன் நன்மைகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் போடி குலாலர் பாளையத்தை சேர்ந்த ஆசிரியர் கருப்பையா. இவர் தனது வீட்டின் மேல் மாடியில் இயற்கை முறையில் மாடித்தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.