உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி கதவு திறக்குமா?திருநங்கை மாணவி எதிர்பார்ப்பு

கோவை: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தவித்து வரும் திருநங்கை மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் அஜிதா, 18. திருநங்கையான இவர் வடகோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கோவை மாவட்டத்தில் பொதுத் தேர்வு எழுதிய திருநங்கை இவர் ஒருவர் மட்டுமே 600க்கு 373 மதிப்பெண்கள் பெற்று அஜிதா தேர்ச்சி பெற்றுள்ளார். பி.எஸ்சி., உளவியல் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கனவோடு கல்லூரிகளை அணுகிய இவருக்கு பல கல்லூரிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக புகார் வந்துள்ளது.இதுகுறித்து, மாணவி அஜிதா கூறியதாவது:முதல்முறையாக உயர்கல்வி கனவோடு மகளிர் கல்லூரிக்குச் சென்றேன். ஆனால், திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக அங்கு எனக்கு சீட் கிடையாது என்று கூறிவிட்டனர்.அதுமட்டுமல்லாமல் எந்த கழிவறையை நீங்கள் பயன்படுத்துவீர்கள் என்ற கேள்வியை எல்லாம் அவர்கள் கேட்டது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, திருநங்கைகள் முன்னேற்றம் குறித்து பேசும் இந்த சமூகம் நிஜத்தில் அதற்கு மாறாகவே செயல்படுகிறது.எனக்கு பள்ளி மற்றும் குடும்பத்தினர் பக்கபலமாக உள்ளனர். ஆனால், என்னைப் போன்ற மற்ற திருநங்கைகளுக்கு இதுபோன்ற சூழ்நிலை அவர்களது வீட்டில் இல்லை. இந்நிலையில், திருநங்கைகளுக்கு உயர்கல்வி வாய்ப்பு சில கல்லூரிகளில் மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்