அம்ரிதா பல்கலைக்கு ஆசியா டைம்ஸ் விருது
சென்னை: அம்ரிதா பல்கலைக்கு, சுற்றுச்சூழல் தலைமைக்கான, ஆசியா டைம்ஸ் உயர் கல்வி விருது வழங்கப்பட்டுள்ளது.கோவையில் அமைந்துள்ள அம்ரிதா பல்கலை, இந்தியாவின் தலைசிறந்த 10 பல்கலைகளுக்கான, என்.ஐ.ஆர்.எப்., - 2023 தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அம்ரிதா விஸ்வ வித்யாபீடம், அம்ரிதா பல்கலை, ஆய்வகத்தில் வாழ்வோம் என்ற கிராமப்புற பயிற்சி திட்டத்தை நடத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் ஏழ்மை நிலையில் உள்ள கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களின் அன்றாட பிரச்னைகளை, சவால்களைக் கண்டறிந்து, அதற்கு நிலையான தீர்வை கண்டறிகின்றனர். இதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவ்விருது பெறும் முதல் நிறுவனமாகும்.இது குறித்து, பல்கலை முதல்வர் கூறியதாவது:பல்கலை வேந்தர் ஸ்ரீஅம்ரிதானந்தமயி தேவியின் கனவாக, ஆய்வகத்தில் வாழ்வோம்' திட்டம், 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டம், மாணவர்களின் மனதில் கருணையை ஏற்படுத்துகிறது. சமுதாய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறது.கடந்த 2013ம் ஆண்டு முதல், இத்திட்டம் 25 மாநிலங்களில், 10 லட்சம் மக்களை சென்றடைந்துள்ளது. 30 சர்வதேச நிறுவனங்கள், 50க்கும் மேற்பட்ட, அம்ரிதா பல்கலை துறைகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கிராமப்புறங்களின் மேம்பாட்டுக்காக களப்பணி ஆற்றி உள்ளனர்.இந்த விருதானது, சர்வதேச தளத்தில் தனித்துவமிக்க தலைமைக்கும், சிறப்புக்கும் அங்கீகாரம் வழங்குகிறது. இந்த தரவரிசை பட்டியலில், 106 நாடுகளில் உள்ள, 1,406 பல்கலைகள் இடம்பெற்றன. இவ்வாறு அவர் கூறினார்.