பார்லிமென்ட் கூட்டத்தொடரில் நீட் விவகாரம் புயலடிக்கும்!
புதுடில்லி: இரண்டு நாள் இடைவெளிக்குப் பின், பார்லிமென்ட் கூட்டத்தொடர் இன்று மீண்டும் துவங்க உள்ள நிலையில், நீட் விவகாரத்தை பெரிதாக எழுப்புவதற்கு எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. இதனால், இரண்டு சபைகளிலும் விவாதத்தின்போது புயல் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பார்லிமென்டில், 18வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் எம்.பி.,க்கள் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, லோக்சபா சபாநாயகர் தேர்தல் 26ம் தேதி நடந்தது. இதில், ஆளும் தரப்பில் நிறுத்தப்பட்ட ஓம் பிர்லா மீண்டும் சபாநாயகரானார். கடந்த 27ம் தேதி கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.இதைத் தொடர்ந்து, 28ம் தேதி ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் துவங்குவதாக இருந்தது. ஆனால், லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால், சபை ஒத்தி வைக்கப்பட்டது.மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் நடந்த மோசடிகள் தொடர்பாக விவாதிக்க, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கு அனுமதி தரவில்லை. தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, தங்களுடைய கருத்துகளை எம்.பி.,க்கள் தெரிவிக்கலாம் என சபாநாயகர் குறிப்பிட்டார். ஆனால், மற்ற அலுவல்களை ஒத்திவைத்து, நீட் தொடர்பாக விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால் அமளி ஏற்பட்டது.மேலும், ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசும்போது, அவர்களுக்கான மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதை சபாநாயகர் மறுத்தார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, ராஜ்யசபாவில் 21 மணி நேரம் விவாதம் நடத்தப்பட உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி அதற்கு, நாளை மறுதினம் பதிலளிக்க உள்ளார். பா.ஜ.,வைச் சேர்ந்த சுதான்சு திரிவேதி, விவாதத்தை 28ல் துவக்கி வைத்தார். பா.ஜ.,வின் கவிதா படிதார், அதை வழிமொழிந்தார். இதன் மீது ஒன்பது உறுப்பினர்கள் இதுவரை பேசியுள்ளனர்.காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர், நீட் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர். இதனால், சபையில் அமளி ஏற்பட்டு, சபை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அங்கு, இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடரும்.லோக்சபாவில் முன்னாள் அமைச்சர் அனுராக் தாக்குர், விவாதத்தை இன்று துவக்கி வைப்பார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகளும், முதல் முறை எம்.பி.,யுமான பன்சூரி சுவராஜ், அதை வழிமொழிவார். லோக்சபாவில், 16 மணி நேரம் விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, நாளை அதற்கு பதிலளித்து உரையாற்றுவார்.நீட் விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இரண்டு சபைகளிலும், இந்த பிரச்னையை, எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதனால், இரண்டு சபைகளிலும் விவாதங்களில் புயலடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அமளி ஏன்?நீட் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்க்கட்சியினர் இதை புரிந்து கொள்ளாமல் அமளியில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு மக்கள் பிரச்னைகளை பற்றி விவாதிக்க விருப்பமில்லை என்றார் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான்.