உள்ளூர் செய்திகள்

இட ஒதுக்கீடு பறிப்பு: ராகுல் புகார்

புதுடில்லி: மத்திய அரசு பணிகளில் லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்களை நியமித்து ஓபிசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீடு வெளிப்படையாக பறிக்கப்படுகிறது என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: யுபிஎஸ்சி.,க்கு பதிலாக ஆர்எஸ்எஸ் மூலம் அரசு பணியில் ஊழியர்களை அமர்த்தி அரசியல் சாசனம் மீது பிரதமர் மோடி தாக்குதல் நடத்துகிறார். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கியப் பணியிடங்களை லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்களை தேர்வு செய்வதன் மூலம் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீடு வெளிப்படையாகப் பறிக்கப்படுகிறது.நாட்டின் உயர்மட்ட அதிகாரம் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் பிரதிநிதித்துவம் பெறவில்லை. இதை சரி செய்வதற்கு பதில், லேட்டரல் என்ட்ரி மூலம் அவர்கள், உயர் பதவியில் இருந்து மேலும் அகற்றப்படுகிறார்கள் என கூறி வருகிறேன். இது யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் மீதான தாக்குதல். தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி மீதான தாக்குதல்.சில கார்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் முக்கிய அரசு பதவிகளை ஆக்கிரமித்தால் என்ன ஆகும் என்பதற்கு சிறந்த உதாரணம் செபி. இதில் தான் தனியார் துறையை சேர்ந்த ஒருவர் முதல்முறையாக தலைவராக்கப்பட்டார். நிர்வாக கட்டமைப்பு மற்றும் சமூக நீதியை பாதிக்கும் எந்தவித தேச விரோத நடவடிக்கைகளையும் இண்டியா கூட்டணி எதிர்க்கும். ஐஏஎஸ் பதவியை தனியார் மயமாக்குவது என்பது இட ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான மோடியின் உத்தரவாதம்.இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்