உள்ளூர் செய்திகள்

பயணிகளுக்கு கைகொடுக்கும் டூரிஸம் பாஸ்போர்ட்

மதுரை: பள்ளி, கல்லுாரிகளில் சுற்றுலா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மதுரை மாவட்ட சுற்றுலா விவரங்கள் அடங்கிய டூரிஸம் பாஸ்போர்ட் இலவசமாக வழங்கப்படுவதாக மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மதுரையின் பாரம்பரியம், பெருமை, கலாசாரத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் சுற்றுலா தலங்களை துாய்மையாக பராமரிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.அதற்காக பள்ளி, கல்லுாரிகளில் முகாம் நடத்தி சுற்றுலா குறித்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. மதுரையில் உள்ள முக்கிய ஆன்மிக, பாரம்பரிய, சமணர் மலை படுக்கை சுற்றுலா தலங்கள் குறித்த விவரங்களை டூரிஸம் பாஸ்போர்ட் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.மதுரையின் முக்கிய திருவிழாக்கள், சுங்குடி சேலை, விளாச்சேரி பொம்மைகள் குறித்த தகவல்கள், எந்தெந்த இடங்களில் என்னென்ன பாரம்பரிய உணவுகள் கிடைக்கும் என்பது வரை தகவல்களை சேகரித்துள்ளோம்.இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மதுரை ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம், மாவட்ட சுற்றுலா அலுவலகம், பெரியார் பஸ் ஸ்டாண்ட், தமிழ்நாடு ஓட்டல்கள், மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள சுற்றுலா தகவல் மையத்தில் இந்த கையேடு இலவசமாக வழங்கப்படுகிறது.விருப்பமுள்ள பள்ளி, கல்லுாரிகள் சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்