உள்ளூர் செய்திகள்

யு.ஜி.சி., விதிமுறைகளில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

புதுடில்லி: இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் முந்தைய பாடப்பிரிவு அல்லாமல் எந்த பாடப்பிரிவையும் மாணவர்கள் தேர்ந்தெடுத்து படிக்கலாம்' என, யு.ஜி.சி., விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பிளஸ் - 2 மற்றும் இளநிலை பட்டப்படிப்புகளில் அறிவியல் சார்ந்த பிரிவை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும்போது, அதே பாடப்பிரிவில் மட்டுமே தற்போது சேர முடியும். பாடப்பிரிவை மாற்ற முடியாது.இந்த விதிமுறையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக்குழு மாற்றம் செய்துள்ளது.இதுகுறித்து யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ் குமார் நேற்று கூறியதவாது:பிளஸ் - 2வில், ஒரு குறிப்பிட்ட பாடப்பிரிவில் படிக்கும் மாணவர், இளநிலை பட்டப்படிப்பில் சேரும்போது, அதே பாடப்பிரிவு அல்லாமல் தன் விருப்பத்துக்கு ஏற்ப வேறு பாடப்பிரிவுகளை தேர்நதெடுத்து படிக்கும் வகையில் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதற்கு, தேசிய அளவில் அல்லது பல்கலை அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றால் போதும். இதே விதிமுறை, முதுநிலை பட்டப்படிப்புக்கும் பொருந்தும்.இது, மாணவர்கள் பல்வேறு பாடப்பிரிவிலும் தங்கள் கற்றல் திறனை விரிவுபடுத்திக் கொள்ள உதவும்.மேலும், கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களின் அடிப்படையில், மாணவர்கள் இரண்டாம், மூன்றாம் அல்லது நான்காம் ஆண்டு படிப்புகளில் நேரடியாக சேரவும் விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் இரண்டு இளநிலை அல்லது இரண்டு முதுநிலை பட்டப்படிப்புகளிலும் சேரலாம். மேலும், ஆறு மத்திய பல்கலைகளில் ஆண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்துவதற்கும் அனுமதிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்