சென்னை ஐஐடியில் உலகளவிலான ஹைப்பர்லூப் போட்டி
சென்னை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், ஆசியாவிலேயே முதன்முறையாக உலகளவிலான ஹைப்பர்லூப் போட்டி 2025 என்ற பெயரில் சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியை பிப்.,21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்துகிறது.சென்னை ஐஐடி, ஐஐடிஎம் பிரவர்த்தக், எஸ்ஏஇ இந்தியா ஆகியவை இணைந்து நடத்தும் இப்போட்டிக்கு இந்திய அரசின் ரயில்வே அமைச்சகமும் ஒத்துழைப்பை வழங்குகிறது. இந்திய ரயில்வேத்துறை, ஆர்சிலார்மிட்டல், எல்அண்ட்டி, ஹிண்டால்கோ ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த அதிநவீன தொழிற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.சென்னை ஐஐடி ஹைப்பர்லூப் ஆசிரிய ஆலோசகரான பேராசிரியர் சத்யசக்ரவர்த்தி கூறுகையில், சரியான வாய்ப்புகளும் தளங்களும் வழங்கப்படும்போது மாணவர்கள் எந்த அளவுக்கு சாதிக்க முடியும் என்பதற்கு இந்த ஹைப்பர்லூப் போட்டி ஒரு சான்றாகும், என்றார்.சென்னை ஐஐடி மாணவர் தலைவர் (ஹைப்பர்லூப்) பிரணவ்சிங் கால் கூறும்போது, இந்தியாவில் பல்துறை ஒத்துழைப்பு, புதுமைகளை வளர்ப்பதற்கான எங்களது நோக்கத்தை விளக்கும் வகையில் உலகளவிலான ஹைப்பர்லூப் போட்டி அமைந்துள்ளது. தையூரில் உள்ள 450 மீட்டர் சோதனைப் பாதை சென்னை ஐஐடி-க்கு ஒரு மைல்கல் என்றார்.புதுமையான கருத்துகள், கனவுகள், மாற்றங்களை ஏற்படுத்துவோரை இந்நிகழ்வில் பங்கேற்க வருமாறு உலகளவிலான ஹைப்பர்லூப் போட்டி 2025 அழைப்பு விடுத்துள்ளது.