மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் உரையாடிய மோடி
புதுடில்லி: டில்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்தார்.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மறுதினம் (பிப்.,05) ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. டில்லியில் நேற்று பா.ஜ., வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி ஓட்டு சேகரித்தார். பிரசாரத்தில் ஆம்ஆத்மி அரசை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில், நேற்று (பிப்.,03) டில்லியில் மரத்தடியில் அமர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி அரசு மீது கடுமையான குற்றச்சாட்டை தெரிவித்தார்.அப்போது பிரதமர் மோடி பேசுகையில், டில்லியில் நான் கேள்விப்பட்டேன். பாஸ் ஆவார்கள் என்று உறுதியாக தெரிந்த மாணவர்களை மட்டுமே 9ம் வகுப்புக்கு மேலே செல்ல ஆம் ஆத்மி அரசு அனுமதிக்கிறது. தேர்வு முடிவுகள் மோசமாக இருந்தால், அரசின் நற்பெயர் கெட்டுவிடும் என்று எண்ணுகிறார்கள் என தெரிவித்தார்.