ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியிடங்கள் நிரப்ப நடவடிக்கை
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில், காலியாக உள்ள பணியிடங்கள், பள்ளி மேலாண்மை குழு வாயிலாக தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளன.தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1,138 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், கோவை மாவட்டத்தில் மட்டும் தொண்டாமுத்தூர் மற்றும் வேல்ஸ் புறத்தில் உள்ள 2 அரசு மேல்நிலைப் பள்ளிகள், பசூரில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளி, மேலும் 12 ஆரம்பப்பள்ளிகள் என மொத்தம் 15 பள்ளிகள் இயங்கி வருகின்றன.இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துவரும் சூழ்நிலையில், ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன.உதாரணமாக, வடவேடம்பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் 26 மாணவர்கள், பெரிய கல்லார் பகுதியில் 5 பேர், சின்கோனாவில் 9 பேர் மற்றும் காளிமங்கலத்தில் 42 என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமையாசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, நான்கு பேர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானவை. இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.12,000 மற்றும் முதுகலை கணினி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். இவர்கள் பள்ளி மேலாண்மை குழு வாயிலாக நியமிக்கப்பட உள்ளனர்.நிரப்ப முடியவில்லைஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. நலத்துறை சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வூட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆசிரியர் கவுன்சிலிங்கில் பெரும்பாலானோர் கோவை மாவட்டத்தை தேர்வு செய்யாததால், காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட முடியவில்லை. எனினும், தற்போது பள்ளி மேலாண்மை குழு வாயிலாக, தற்காலிக ஆசிரியர் நியமன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.