எண்ணெய் உணவுக்கு நோ: பள்ளிகளில் விழிப்புணர்வு
புதுடில்லி: உணவில் எண்ணெய் பயன்பாட்டை குறைக்க, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது.நம் நாட்டில் நகர்ப்புற குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவதும், சர்க்கரை மற்றும் எண்ணெய் உடைய தின்பண்டங்களை அதிகம் எடுத்துக் கொள்வதும் இதற்கு காரணம்.நாட்டில், 20 சதவீதத்துக்கும் அதிகமான இளைஞர்கள் உடல் பருமனால் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. எண்ணெய் மற்றும் சர்க்கரை பயன்பாட்டை குறைக்கும்படி, பிரதமர் நரேந்திர மோடியும் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறார்.இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே எண்ணெய் பயன்பாட்டின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. இதற்காக, எண்ணெய் போர்டு என்ற பலகையை அமைக்கும்படி, அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.முன்னதாக, சர்க்கரை பயன்பாட்டை குறைக்க, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், சர்க்கரை பலகை நிறுவப்பட்ட நிலையில், தற்போது எண்ணெய் நுகர்வை குறைக்க இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.எண்ணெய் பலகை என்றால் என்ன?சி.பி.எஸ்.இ., உத்தரவுப்படி, பள்ளி வளாகங்களில் உள்ள கேன்டீன்கள், நடைபாதைகள், ஆசிரியர்களின் ஓய்வறைகளில், எண்ணெய் பலகைகள் நிறுவப்பட வேண்டும். இது, பெரிய போஸ்டராகவோ அல்லது டிஜிட்டல் திரையாகவோ இருக்கலாம். அதில், அதிக கொழுப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கைகள் இடம்பெறும். மாணவர்கள், ஆசிரியர்களிடையே எண்ணெய் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.