மாணவர்களை ஸ்கிரைப் ஆக நியமிக்க எதிர்ப்பு
சென்னை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், எதிர்பாராத விபத்தால் பாதிக்கப்பட்டோர், ஒரு உதவியாளரின் வாயிலாக தேர்வெழுத அனுமதி உண்டு. அவ்வாறான உதவியாளர்களை, 'ஸ்கிரைப்' என அழைக்கின்றனர்.இதுவரை, பள்ளி ஆசிரியர்களே, 'ஸ்கிரைப்' ஆக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்தாண்டு கல்லுாரி மாணவ, மாணவியர், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து, 'ஸ்கிரைப்' ஆக நியமிக்க, பள்ளிக் கல்வி துறை அறிவுறுத்தி உள்ளது.இதற்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் தான், அவர்களின் சைகை மொழி மற்றும் அவர்களின் பேச்சை அறியும் திறன் பெற்றவர்களாக இருப்பர். இந்நிலையில், திடீரென புதிய நபர் தனக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டால், அவர்கள் பதற்றமடைவர். இது, மாற்றுத்திறனாளி மாணவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும். அதனால், பழைய நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.