உள்ளூர் செய்திகள்

போதைப் பழக்கத்தை மாற்றுவதே பலன் அளிக்கும்

பள்ளி முதல்வர்களுக்காக 'தினமலர் - பட்டம்' சார்பில் எழுக கல்வி கருத்தரங்கு சென்னையில் நேற்று நடந்தது.நிகழ்ச்சியில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மண்டல இயக்குநர் அரவிந்தன் பேசியதாவது:நான், கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப் பொருள் தடுப்பு பிரிவில் பணியாற்றுகிறேன். போதைப் பொருள் சார்ந்து செய்யப்பட்ட, ஒரு சோதனை மிகவும் பிரபலம்.அதாவது, ஒரு கூண்டில், ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் போதைப்பொருள் கலந்த தண்ணீர் பாட்டிலை வைத்து, அங்கே ஒரு எலியை விட்டனர். அந்த எலி, போதை தண்ணீரை குடித்து இறந்தது.அதே போல், மீண்டும் செய்ததில், அப்படியே நிகழ்ந்தது. பின், எலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அப்போது, சில எலிகள் மட்டும் தண்ணீரை குடித்தன.சமூக வாழ்க்கை பின், அந்த கூண்டை பெரிதாக்கி, கொஞ்சம் விளையாட்டு சாதனங்கள் வைக்கப்பட்டன. எலிகள் மேலும் அதிகரிக்கப்பட்டு, சமூக வாழ்க்கைக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அப்போது, கேளிக்கையில் ஈடுபட்ட எலிகள், கடைசி வரை, போதை தண்ணீரை நாடவே இல்லை.அதே போல் தான், தனித்திருக்கும் ஒவ்வொரு மனிதரும், ஏதோ ஒரு காரணத்துக்காக, ஏதோ ஒரு விஷயத்தில், ஈர்ப்புடன் உள்ளார். கடந்த 2019ல் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் 3 சதவீதம் பேர், ஏதோ ஒரு போதைப் பொருளை நுகரும் தகவல் வெளியானது.அது, மாணவர்களுக்கும் பொருந்தும். அவர்களைக் கண்டறிந்து, பள்ளியை விட்டு வெளியேற்றுவதை விட, அந்த மாணவர்களுக்கு போதைப்பொருள் வந்த வழி, சமூக சூழல், பெற்றோரின் நிலை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, முடிவெடுக்க வேண்டி உள்ளது.காவல்துறை வழியாக, அடாவடியாக, போதைப்பொருள் வரும் வழிகளை கண்டறிந்தும் போதைப்பொருள் கிடங்குகளை அழித்தும், நடவடிக்கை எடுக்கும் போது, போதைப் பொருளின் விலை பல மடங்கு அதிகரிக்கிறது. அதன் வினியோக சங்கிலியிலும், அதன் வடிவிலும் மாற்றம் ஏற்பட்டு, போதைப் பொருள் புழக்கம் மட்டும் நீடிக்கிறது.'போதை' அதாவது, 25 வயதுக்குள் உள்ளவர்களின் மூளையில், பின் விளைவுகளை யோசித்து உணரும் தன்மை மிகவும் குறைவு என்பதால், அவர்கள் தான், இந்த நுகர்வால் பாதிக்கப்படுகின்றனர்.பள்ளி, கல்லுாரி வளாகங்களில், 'போதைப் பொருள் இல்லாத வளாகம்' என்று கூறுவதை விட்டுவிட்டு, விளையாட்டில் சிறந்த வளாகம், கலையில் சிறந்த வளாகம், படிப்பில் சிறந்த வளாகம் என்ற நேர்மறை வார்த்தைகளை பயன்படுத்தி, அவர்களை பாதுகாக்க வேண்டும்.மாணவர்களுக்கு முன், சாதித்தவர்களை உதாரணமாக நிறுத்த வேண்டும். அதே நேரம், 'போதை' என்ற எதிர்மறை வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்