போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி துவக்கம்
கடலுார்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., ஆர்.ஆர்.பி., எஸ்.எஸ்.பி., போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.மேலும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் நுாலக வசதி உள்ளது.இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் அதிக அளவிலான மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.மேலும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.இத்தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் நோக்கில் இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த, 23ம் தேதி முதல் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 02:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது.இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் இரண்டு மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.