உள்ளூர் செய்திகள்

கலைத்திருவிழா போட்டிகளில் மாணவ, மாணவிகள் அசத்தல்

திண்டுக்கல்: மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் முடிவடைந்த நிலையில் மாவட்ட அளவிலான போட்டிகள் திண்டுக்கல் எம்.எஸ்.பி., சோலை நாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 1340 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர்.அதன்படி முதல் நாளில் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்தவர்களுக்கான போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கலெக்டர் துர்கா துவக்கி வைத்து பேசுகையில், 'கலைத்திருவிழா போட்டிகள் மாணவர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஊக்குவிப்பதோடு, அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமைகிறது' என்றார்.தொடர்ந்து நடந்த போட்டிகளில் மாணவ, மாணவிகள் பரதம், நாட்டுப்புற நடனம் ஆடி அசத்தினர். இசைக்கருவிகள் இசைத்தல், களிமண் சிலை, காய்கறி சிற்பம், பானை ஓவியம் ஆகியவற்றில் பங்கேற்று தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமார், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் திருப்பதி, மாவட்ட கல்வி அலுவலர்கள் (துவக்கப்பள்ளி) ஜெயந்தி, சண்முகநாதன், வட்டார வளமைய அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்