பள்ளி பாடமானது போபால் விஷவாயு கொடூரம்
புதிய கல்வியாண்டிற்கான என்.சி.இ.ஆர்.டி. 8ம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் போபால் விஷவாயு கசிவு சம்பவம் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இந்த கோர விபத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். இந்த வழக்கில் இன்னும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இப்பாடத்தில் விபத்தின் கோரத்தன்மை விவரிக்கப்பட்டிருப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்கால வாழ்க்கை, நாட்டிலுள்ள பலவீனமான சுற்றுசூழல் சட்டங்கள் ஆகியவைப் பற்றி அலசல்கள் உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள், வளரும் நாடுகளிலுள்ள வறுமை மற்றும் பலவீனமான சட்டங்களை எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன என்பதைப் பற்றியும் விவாதங்கள் உள்ளன. இதைதவிர இந்த விபத்தின் கொடூரத்தன்மையைக் காட்டும் விதத்தில், விபத்தில் மரணமடைந்தவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட யூனியன் கார்பைட் நிறுவனத்தின் படம் உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.