உள்ளூர் செய்திகள்

திறந்தநிலைப் பல்கலையில் எம்.எட்., துவக்க திட்டம்

சென்னை:  ‘தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பயிற்று மொழிகளில் எம்.எட்., படிப்புத் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது,’ என துணைவேந்தர் பழனிச்சாமி தெரிவித்தார். சென்னையில், நிருபர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் பி.எட்., படிப்பு துவக்கப்படுகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலப் பயிற்று மொழிகளில் தலா 500 இடங்களுடன் இப்படிப்புத் துவக்கப்படுகிறது. தமிழ்ப் பயிற்று மொழி பி.எட்., படிப்புக்கான நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 27ம் தேதி நடந்தது. இத்தேர்வு முடிவுகள், 11ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக் கவுன்சிலிங் செப்டம்பர் 20, 21ம் தேதிகளில் நடக்கவுள்ளது. வகுப்புகள் ஜனவரி முதல் வாரத்திலிருந்து துவங்கும். ஆங்கிலப் பயிற்றுமொழி பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பம் செப்டம்பர் 15ம் தேதி வரை வழங்கப்படவுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 19ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான நுழைவுத்தேர்வு, அக்டோபர் 12ம் தேதி நடந்தப்பட்டு, முடிவுகள் அக்டோபர் 30ம் தேதி வெளியிடப்படும். மாணவர் சேர்க்கைக் கவுன்சிலிங் நவம்பர் 29, 30ம் தேதிகளில் நடக்கும். வகுப்புகள் 2009ம் ஆண்டு ஜனவரியிலிருந்து துவங்கும். மேலும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பயிற்று மொழிகளில் எம்.எட்., படிப்பும் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்துவருகின்றன. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பாடப் புத்தகங்களை ‘சிடி’ வடிவில் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மொத்தமுள்ள 500க்கும் மேற்பட்டப் பாடங்களில் இதுவரை 100 பாடங்களுக்கான ‘சிடி’ தயாரிக்கப்பட்டுள்ளன. ஒரு பாடத்திற்கான ‘சிடி’யைத் தயாரிக்க 75 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. தொலைதூரக் கல்விக் கவுன்சிலிங் வழங்கும் மேம்பாட்டு நிதியைக் கொண்டு இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ‘சிடி’யில், புத்தகத்தில் உள்ள பாடங்களுடன், ஆசிரியர் பாடம் நடத்தும் வீடியோ காட்சிகள் மற்றும் அனிமேஷன் விளக்கங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. வகுப்பறையில் ஆசிரியர் ஒருமுறை தான் பாடம் நடத்துவார். இம்முறையில், மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட நேரத்தில், எத்தனை முறை வேண்டுமானாலும் பாடங்களைப் போட்டுப் பார்த்து படித்துக் கொள்ள முடியும். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்குப் பாடப்புத்தகத்துடன், இந்த ‘சிடி’யும் இலவசமாக வழங்கப்படும். தங்களிடம் சொந்தமாக கம்ப்யூட்டர் இல்லாத மாணவர்கள், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 540 படிப்பு மையங்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் மூலம் இந்த ‘சிடி’யைப் பயன்படுத்தலாம். இது கிராமப்புற மாணவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இவ்வாறு பழனிச்சாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்