இந்தியாவில் கல்வித் தரம் உயர வேண்டும்
2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2011ல், 9.21 கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்து தற்போது 74.04 ஆக உயர்ந்துள்ளது. இது 2001ஆம் ஆண்டு 64.83 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கல்வி அறிவு பெற்றவர்களின் விழுக்காடு 10/ அளவிற்கு உயர்ந்து தற்போது 75 விழுக்காடாக உள்ளது. இது நிச்சயமாக ஒரு நல்ல முன்னேற்றம்தான் என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். ஜவகர்லால் நேரு பல்கலையின் பேராசிரியர் பிரவீன் ஜா கூறுகையில், ஆசிய நாடுகளில் இந்தியா தற்போது 3வது இடத்தில் உள்ளது, கல்வியறிவில் முன்னேறியிருப்பது, சமுதாய அளவிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ், இந்த கல்வியறிவு வளர்ச்சி நிச்சயமாக மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார். மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு பேசிய யுனிசெப் அதிகாரி ஊர்மிளா சர்கர், மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததும், மாநில அரசுகளின் சீரிய கொள்கைகளாலும் இந்த நிலையை இந்தியா அடைந்துள்ளது. மேலும், வாழ்நாள் முழுவதும் கல்வி கற்கும் வகையில் மக்களை மாற்ற வேண்டும். தனியார் மற்றும் அரசு பள்ளிகளை தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியம் என்று கூறினார். கல்வியறிவை வளர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட கொள்கைகளுடன், கல்வித் தரத்தை வளர்க்கவும் கொள்கைகள் கொண்டு வரப்பட வேண்டும். வெறும் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை மட்டும், நாட்டின் கல்வி நிலையை சரியாக காட்டும் வரைபடமாக இருக்காது. கல்வித் தரமும் முக்கியம் என்று தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ரந்தீப் கெளர் கூறினார். மாணவர்களை விட, மாணவிகளின் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவிற்கு உயர்ந்துள்ளதும், இந்த கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. வெறும் வளர்ச்சி மட்டுமே லட்சியத்தை அடைந்ததாக ஆகாது. நாம் லட்சியத்தை அடைய இன்னும் அதிக காலம் பயணிக்க வேண்டும் என்று ஊர்மிளா சர்கர் கூறியுள்ளார். லட்சியத்தை அடைய பல்வேறு சவால்களை நாம் சந்திக்க வேண்டி உள்ளது. கலாச்சார தடை, சமுதாய தடை, பெண் இனத்தை அடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுபவர்களை எதிர்த்தல், பள்ளிகளில் சுகாதார சீர்கேடுகள் என பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். இதுபோன்ற சவால்கள் களையப்பட்டால், இந்தியப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் சர்கர் கூறினார். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து, ஆண், பெண் கல்வியறிவு பெற்றவர்களின் விகிதாச்சாரம் தற்போது குறைந்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.