தினமலர் செய்தியால் உத்திரகோசமங்கை பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு மையம்
கீழக்கரை: தினமலர் செய்தியால், உத்திரகோசமங்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தேர்வு மையம், அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. உத்திரகோசமங்கை அரசு பள்ளி கடந்த 1964 ல் கட்டப்பட்டது. இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக இருந்தபோது, இங்கு படித்த மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுத 17 கி.மீ., தொலைவில் உள்ள ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வந்தனர். தேர்வு துவங்குவதற்கு முன் தேர்வு மையத்தை தேடி கண்டுபிடிப்பதிலும், பஸ்களிலும், தனியார் வேன்களிலும், சென்று தேர்வு எழுதிவிட்டு திரும்புவதால் ஏற்பட்ட நேரம் விரையத்தாலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் கடந்த 2014 அக்டோபரில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து கலெக்டர், கல்வித்துறை அதிகாரிகளின் பரிசீலனைக்கு பின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை உத்திரகோசமங்கை மேல்நிலைப் பள்ளியிலேயே நடத்தலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. கல்வி மேலாண்மைக்குழு செயலர் வி.ஸ்ரீதர் கூறுகையில், "பத்தாம் வகுப்பு தேர்விற்காக உத்திரகோசமங்கை பள்ளியில் 85 பேரும், வேளானூர் பள்ளியில் 30 பேரும், பனையடியேந்தல் பள்ளியில் 29 பேருமாக மொத்தம் 144 மாணவர்கள் இங்கு தேர்வு எழுத வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தினமலர் நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார்.