உள்ளூர் செய்திகள்

அரசு பொதுத்தேர்வை போன்றே பள்ளிகளில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 காலாண்டு தேர்வு

விருதுநகர்: "அரசு பொதுத்தேர்வை போன்றே, பள்ளிகளில் 10ம்வகுப்பு, பிளஸ் 2 காலாண்டு தேர்வு நடத்த வேண்டும்" என மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் கேட்டுள்ளார். பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: பிளஸ் 2 காலாண்டுத்தேர்வுகள் செப்.,15ல் துவங்கி செப்.,26ல் முடிகிறது. 10ம்வகுப்பிற்கான காலாண்டுத் தேர்வுகள் செப்.,17ல் துவங்கி செப்.,26ல் முடிகிறது. இதில் ஒரு அறைக்கு 20 தேர்வர்கள் வீதம் தேர்வறை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தேர்வறை ஒன்றுக்கு ஒரு அறை கண்காணிப்பாளர் வீதம் நியமனம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட தேர்வு நடைபெறும் பாட ஆசிரியர்களை, அறை கண்காணிப்பாளர்களாக பணியில் ஈடுபடுத்தக்கூடாது. அரசு பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவதைப்போல், மாணவர்களின் உண்மையான பாட அறிவை சோதிக்கும் வகையில், இத்தேர்வு நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் பாடதேர்வுகள் முடிந்தவுடன் விடைத்தாள்களை, மூன்று நாட்களுக்குள் பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய அறிவுறுத்த வேண்டும். பின்னர் அந்த விடைத்தாள்களை மாணவர்களிடம் அளித்து சரிபார்க்கப்பட்ட பின்னர், அவர்களின் மதிப்பெண் விபரங்களை, www.chiefeducationalofficer.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்