சட்டப்படிப்பு தரவரிசை வெளியீடு: 15ல் கவுன்சிலிங்
சென்னை: சட்டப்படிப்பு கவுன்சிலிங்கில், மாணவர்களின் தரவரிசை பட்டியல் மற்றும் கட் - ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது.தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையின் கீழ் செயல்படும், அரசு மற்றும் தனியார் சட்ட கல்லுாரிகளில், எல்.எல்.பி., சட்டப் படிப்பில், 5 ஆண்டு ஒருங்கிணைந்த பாடப்பிரிவில் சேர, 7,042 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.மாநிலம் முழுதும் செயல்படும், 14 அரசு சட்ட கல்லுாரிகள் மற்றும், எட்டு தனியார் சட்ட கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில், 2,043 இடங்களுக்கு, 16,984 பேர் விண்ணப்பித்துள்ளனர். சட்ட பல்கலையின் வளாகத்தில் செயல்படும், சீர்மிகு சட்டப்பள்ளியில், 624 இடங்களுக்கு, 7,042 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் மற்றும் கட் - ஆப் மதிப்பெண் விபரத்தை, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை நேற்று வெளியிட்டது.பட்டியலில் உள்ளவர்களுக்கு, நாளை முதல் 12ம் தேதி வரை அசல் சான்றிதழ் சரிபார்க்கப்பட உள்ளது. வரும், 15ம் தேதி ஆன்லைன் வழியே மாணவர் சேர்க்கை வழங்கப்படும். ஜூன் 18 முதல், 20க்குள் மாணவர்கள் கல்லுாரியில் சேர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.