பொதுத்தேர்வு மாணவர் பட்டியல் அக்., 30க்குள் அனுப்ப உத்தரவு
திண்டுக்கல்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் பெயர் பட்டியலை, ‘சிடி’யில் தயாரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, பள்ளியின் பெயர் பட்டியல், ஆண்டுதோறும் சென்னை தேர்வுத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்தாண்டு அனுப்பி வைக்கப்பட்ட பட்டியலில் பல மாணவ, மாணவிகளின் பெயர்களில் குழப்பம் ஏற்பட்டது. மேலும் சிலரின் இன்ஷியலும் மாறி வந்தது. இதனால் மதிப்பெண் போடுவதிலும், தேர்வு முடிவுகள் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. அதனையடுத்து, இந்தாண்டு மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியலை, ‘சிடி’யாக தயாரித்து அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும், ‘சிடி’யில் உள்ள மாணவ, மாணவிகளின் பெயரை சரிபார்த்து, இதற்கான ஒப்புகை சீட்டில் கையெழுத்திட வேண்டும். இந்த பட்டியலை, அக்டோபர் 30ம் தேதிக்குள், சென்னை கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.