ஐ.ஐ.டி., மெட்ராஸ் - ஈராஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த பி.எஸ்., மாணவர்களின் ஆவணப்படம் வெளியீடு!
சென்னை: சென்னை ஐ.ஐ.டி.,யின் பி.எஸ்., பட்டப்படிப்பு மாணவர்களின் வாழ்க்கைப் பயணம் மற்றும் சாதனைகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'போர்ட்ரெய்ட் ஆஃப் மெனி ஃபேசஸ்' என்ற ஆவணப்படம் வெளியாகியுள்ளது.இதனை, முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான 'ஈராஸ் யுனிவர்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி., தயாரித்துள்ளது. அக்கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான சாஸ்வத் முகர்ஜி, இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில், பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்த 17 மாணவர்களின் வாழ்வியல் சவால்கள் மற்றும் உயர்கல்வி ஏற்படுத்திய மாற்றங்கள் ஆகியவை தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது.ஏழைகளைத் தேடி கல்வி செல்ல வேண்டும்!சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடைபெற்ற சிறப்புத் திரையிடலுக்குப் பின் செய்தியாளர்களிடம், ஐ.ஐ.டி., இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி பேசியதாவது:ஏழைகளால் கல்வியைப் பெற முடியாவிட்டால், கல்வியே அவர்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியைத் தாரக மந்திரமாகக் கொண்டே இந்த வளாகமற்ற பி.எஸ்., படிப்புகள் தொடங்கப்பட்டன. குறிப்பாக, இத்திட்டத்தில் பயிலும் மாணவர்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டிற்குப் கீழ் உள்ளவர்கள். கடினமான 'ஜே.இ.இ.,' நுழைவுத்தேர்வு இன்றி எளிய பின்னணி கொண்ட திறமையான மாணவர்களுக்கும் ஐ.ஐ.டி., தரத்திலான கல்வி சென்றடைய இது பெரும் பாலமாக அமைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நான்கு பிரிவுகள்சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் சென்னை ஐ.ஐ.டி.,யின் பி.எஸ்., தரவு அறிவியல் பட்டப்படிப்பானது, உலகிலேயே மிகப்பெரிய வளாகமற்ற ஆன்லைன் கல்வித் திட்டமாகப் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தற்போது தரவு அறிவியல் தவிர்த்து எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ், விண்வெளித் தொழில்நுட்பம், மேலாண்மை உள்ளிட்ட நான்கு முக்கிய பிரிவுகளில் பி.எஸ்., பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும், ஆன்லைன் வழி வகுப்புகள் மற்றும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் நேரடித் தேர்வுகள் என வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பாடத்திட்டம், மாணவர்கள் தங்கள் பணி அல்லது பிற தேவைகளுக்கு இடையிலும் உயர்கல்வி பெற வழிவகை செய்துள்ளது.சமூகத்தில் பல பிரச்னைகளை சந்திக்கும் மாணவர்களின் மன உறுதி, அவர்களின் குடும்ப லட்சியங்கள் மற்றும் தியாகங்களைப் பிரதிபலிக்கும் இந்த 'போர்ட்ரெய்ட் ஆஃப் மெனி ஃபேசஸ்' ஆவணப்படமானது 'ஈராஸ் நௌ' இணையதளத்தில் கட்டணமின்றி இலவசமாகப் பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.