இனி அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்தில் 5 நாள்களுக்கு பால்
பெங்களூரு: ‘அங்கன்வாடிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் பால் வரும் ஆண்டிலிருந்து ஐந்து நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது,” என, முதல்வர் சித்தராமையா கூறினார். பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்கும் திட்டத்தின் கீழ், தற்போது, அங்கன்வாடி மையங்களில், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, வாரந்தோறும் திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தினமும், 8 லட்சம் லிட்டர் பாலும், ஆண்டுக்கு, 4,800 கோடி ரூபாயையும் அரசு செலவழித்து வருகிறது. முதல்வர் சித்தராமையா கூறியதாவது: அங்கன்வாடி மையங்களில், மூன்று நாள் பால் வழங்கும் திட்டத்தை, வரும் ஆண்டிலிருந்து, ஐந்து நாட்களாக உயர்த்தப்படும். தினம், 35 லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி அளவு, 63 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. பால் உற்பத்தி விவசாயிகளுக்கு, லிட்டருக்கு இரண்டு ரூபாய் வீதம் அளிக்கப்படும் மானிய தொகையும், நான்கு ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பால் உற்பத்தி, தினமும், 70 லட்சம் லிட்டரை எட்டும் என்று கருதுகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.