உள்ளூர் செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு இன்று துவக்கம் 9.02 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. மாநிலம் முழுதும், 2,871 தேர்வு மையங்களில், 9.02 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் மார்ச், 18ம் தேதி துவங்கும் என, பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, கடந்த மாதம் 17ம் தேதி அறிவித்தார்.அதன்படி, இன்று துவங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி., தேர்வை, 9 லட்சத்து 2 ஆயிரத்து 889 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். அவர்களில், 62,845 பேர் மறுதேர்வர்கள். 27,189 பேர் தனித்தேர்வர்கள்.தேர்வுக்காக மாநிலம் முழுதும், 2,871 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கன்னடா, தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, தெலுங்கு, உருது, சமஸ்கிருதம் ஆகிய முதல் மொழிக்கு இன்று தேர்வு நடக்கிறது. காலை, 10:00 முதல் மதியம் 01:15 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.10:00 மணிக்கு தேர்வு துவங்கியதும், 15 நிமிடங்கள் மாணவ, மாணவியர் வினாத்தாளை முழுதும் படிக்க நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்பின் தேர்வு எழுத துவங்கலாம்.ஹால் டிக்கெட், பள்ளி அடையாள அட்டை, பேனா, தண்ணீர் பாட்டில் எடுத்து வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஹால் டிக்கெட் எடுக்காமல் வரும் மாணவர்களுக்கு தேர்வு எழுத அனுமதி இல்லை. ஸ்மார்ட் வாட்ச், கால்குலேட்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு கர்நாடக சட்டசபையில் நேற்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.முதல்வர் சித்தராமையா பேசுகையில், “எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு என் வாழ்த்துகள். தேர்வுகள் மூன்று கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முதல் கட்டத்தில் தோல்வி அடைந்தாலும், இரண்டாவது, மூன்றாவது முயற்சியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் எந்தவித பதற்றமும் இன்றி தேர்வு எழுத வேண்டும்,” என்றார்.எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசுகையில், “தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள். தங்கள் பிள்ளைகள் மீது அழுத்தத்தை திணிக்க வேண்டாம் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொள்கிறேன். சமூக ஊடகங்களில் வினாத்தாள் கசிவதை தடுக்க, பள்ளி கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா பேசுகையில், “தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். கல்வி துறையில் பல சீர்திருத்தம் செய்து உள்ளோம். மூன்று கட்டங்களாக தேர்வு நடப்பதால், மாணவர்கள் எந்த கவலையும் இன்றி தேர்வு எழுத வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்