உள்ளூர் செய்திகள்

பிற நகரங்களிலும் கவுன்சிலிங் நடத்தப்படுமா?

மதுரை: தமிழகத்தில் வழக்கம்போல, இந்தாண்டும் பொறியியல் கல்லூரி மாணவர்களின் சேர்க்கைக்கான கவுன்சிலிங் சென்னையில் மட்டுமே நடக்க உள்ளது. மதுரையிலும் நடத்த வேண்டும் என்று மாணவர்கள் விரும்புகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், சென்னை, மதுரை, திருச்சி, கோவை மாவட்டங்களில் சோதனை முயற்சியாக ஒரே நேரத்தில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இம்மாவட்டங்களைச் சுற்றியுள்ள மாணவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்று, ஒரே நாளில் வீடு திரும்பினர். ஆனால் தொழில்நுட்ப ரீதியான பிரச்னை ஏற்பட்டதால், இத்திட்டம் கைவிடப்பட்டு சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இன்ஜினியரிங் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் கவுன்சிலிங் சென்னையில் மட்டுமே நடக்க உள்ளது. இதனால் ஒவ்வொரும் ஆண்டும் மாணவர்களும், பெற்றோரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். நேற்று மதுரையில் பொறியியல் விண்ணப்பம் பெற வந்த சில மாணவிகள் கூறியதாவது: கே. சஞ்சனா: நடுத்தர குடும்பத்தினர் சென்னை சென்று ஒருநாள் தங்கி கவுன்சிலிங்கில் பங்கேற்கும்போது, அதுவே சில ஆயிரங்களைத் தொடும். எந்த ரயிலிலும் முன்பதிவு செய்தால், உடனடியாக இடம் கிடைக்காது. ரயிலில் 50 சதவீத சலுகை இருந்தாலும், அதை பயன்படுத்துவது இயலாது. சென்னையில் தேவையற்ற போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ஆர். நந்தினி காயத்ரி: பஸ், ரயில்களில் இடம் கிடைப்பது கடினம். பாதி பேருக்கு ரயிலில் சலுகை இருப்பதே தெரியாது. பெண் பிள்ளைகள் பெற்றோரையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், தங்களது இரண்டு நாள் சம்பளத்தை தியாகம் செய்துதான் கவுன்சிலிங்கில் கலந்து கொள்கின்றனர். இதற்கு முன் பிற மாவட்டங்களில் சாத்தியமானது எப்படி? அதையே தொடரலாம். இந்துமதி: கவுன்சிலிங் தினத்திற்கு முதல்நாளே சென்னையில் இருந்தால்தான், மறுநாள் குறிப்பிட்ட நேரத்தில் கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். தூரமும், அலைச்சலும் அதிகம். புதிய இடத்திற்கு செல்வதால் டென்ஷன் அதிகமாகி, கவுன்சிலிங்போது மனக்குழப்பம் ஏற்படும். மகாலட்சுமி: என் தந்தை கூலி வேலை செய்கிறார். சென்னை தெரியாத இடம். கவுன்சிலிங் நடக்கும் இடத்தை கண்டுபிடிப்பது சிரமம். தந்தையோ, தாயோ, உறவினர்களில் ஒருவர் உடன் வரவேண்டும். கவுன்சிலிங் சென்று திரும்ப ஐந்தாயிரம் ரூபாய் ஆகும். இது அனாவசிய செலவு மட்டுமின்றி, வீண் அலைச்சல். மதுரையில் இருந்தால் மிகவும் வசதியாக இருக்கும். சிவரஞ்சனி: அனைவரும் ஒரே இடத்திற்கு வருவதால், தங்கும் இடம், உணவு கிடைப்பது கடினம். கூட்டம் அதிகம் இருப்பதால், தனியார் பஸ்களில் கட்டணம் அதிகம் கொடுத்து செல்ல வேண்டும். ஏற்கனவே மதுரையில் நடந்ததுபோன்று, இந்த ஆண்டும் கவுன்சிலிங் நடத்த நடவடிக்கை வேண்டும். அப்போதுதான், தென் மாவட்ட மாணவ, மாணவியர் நிம்மதி பெற முடியும். மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலை பதிவாளர் பெருமாள் பிள்ளை: நான்கு மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கம்ப்யூட்டர் சர்வர் இணைக்கப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்பட்டது. ஆனால் ஏதாவது ஒரு மாவட்டத்தில் தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டால், பிற மாவட்டங்களில் கவுன்சிலிங் நிறுத்தப்படுவதில்லை. நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட, இதனால் பாதிக்கப்படுவர். மாணவர்களுக்கு தகுதி, மதிப்பெண் அடிப்படையில் விரும்பிய கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்க வேண்டும் என்றால், சென்னையில் மட்டும்தான் நடத்த முடியும். இது தவிர்க்க முடியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்