உற்சாகத்துடன் பள்ளி சென்ற மாணவர்கள்
புதிய கல்வி ஆண்டில் 15 நாட்களுக்குப் பின் மாணவர்கள் நேற்று உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர். அவர்களுக்கு புதிய அட்டவணையுடன் வகுப்புகள் துவங்கின. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும் சமச்சீர் கல்வி முறையில் குறைபாடுகளை களைந்து அமல்படுத்த முடிவெடுத்தது. எனவே ஜூன் 1க்குப் பதில், நேற்று 15ம் தேதி வகுப்புகள் துவங்கின. புத்தாடை அணிந்த மாணவர்கள் புதிய உற்சாகத்துடன் பள்ளிக்குச் சென்றனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் பாடப்புத்தகம் இல்லாத நிலையில் மாணவர்கள் வகுப்பறையில் சும்மா இருக்கக் கூடாது என்பதற்காக, ஆசிரியர்களிடம் புதிய அட்டவணை தரப்பட்டது. அதில் ஒவ்வொரு வகுப்புக்கும், என்னென்ன பாடங்கள் நடத்துவது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பத்தாம் வகுப்பை பொறுத்தவரை முதல் பாடவேளையில் சமூக முதல்பாட வேளை (9-10 மணி) தமிழ், தொடர்ந்து(10-11) ஆங்கிலம், பத்துநிமிடம் இடைவேளை, பிறகு (11.10- 12.10) கணிதம், அடுத்து (மதியம் 1 மணி வரை) மதிய உணவு இடைவேளை. மதியம் 1 - 2 மணி வரை அறிவியல், 2-3 மணி வரை சமூகஅறிவியல், 3 முதல் 3.30 மணி வரை கல்வி சார்ந்த மற்றும் பிற செயல்பாடுகள் என பாடவேளை பிரிக்கப்பட்டு இருந்தது. இதில் தமிழ், ஆங்கில பாடவேளைகளில் கேட்டல், பேசுதல் திறன் வளர்க்கும் வகையிலும், கணித பாடவேளையில் வாய்ப்பாடு, அறிவியலில் அன்றாட வாழ்வில் அறிவியல், சமூக அறிவியலில் இல்லம், பள்ளி மற்றும் சமூகத்தில் தனிமனித செயல்பாடுகள், இறுதி பாடவேளையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு முதலியவற்றை நடத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடவேளைகள் வகுப்புக்கு வகுப்பு நேர மாறுதலுக்குட்பட்டுள்ளது. கோர்ட் தீர்ப்பு வர ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டியிருப்பதால், இக்கால கட்டத்தில் இதையே மீண்டும் மீண்டும் நடத்த உள்ளனர்.