விடைத்தாள் நகல் இழுபறி:மாணவர்கள் தவிப்பு
பிளஸ் 2 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்து, 45 நாட்களாகியும் கிடைக்காததால், மறு கூட்டலுக்கு வழியின்றி மாணவர்கள் தவிக்கின்றனர். தேர்வு முடிவுகள் கடந்த மே 9ம் தேதி வெளியிடப்பட்டன. வெளியான ஒரு வாரத்திற்குள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தனர். இவை கிடைத்தால் தான், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆனால், நகல் கேட்டு 45 நாட்களாகியும் இன்னும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், "கணக்கு, உயிரியல், இயற்பியல், ஆங்கில பாடங்களுக்கு நகல் வரவில்லை. மறு கூட்டல் மதிப்பெண் தெரிந்தால் தான், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியும். கல்வித்துறை தாமதத்தால் மன உளைச்சல் அடைந்துள்ளோம்" என்றனர். முதன்மை கல்வி அலுவலர் அசோகன் கூறுகையில், "கணக்கு தாள் வந்து விட்டது. மற்ற விடைத்தாள்கள் சென்னையில் இருந்து விரைவில் வந்து விடும். கவுன்சிலிங் குறித்து உயர் அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை" என்றார்.