பள்ளித் தோட்டத்தில் அதிசய கத்தரிக்காய்
திருநெல்வேலி: பாளை., ஐ.ஐ.பி.இ., லட்சுமி ராமன் பள்ளி விவசாய தோட்டத்தில் ஒரே காம்பில் விளைந்த நான்கு கத்தரிக்காயை மாணவ, மாணவிகள் ஆச்சர்யத்துடன் பார்வையிட்டனர். பாளை., ஐ.ஐ.பி.இ., லட்சுமி ராமன் பள்ளி வளாகத்தில் அனைத்து துறைகளையும் பற்றி பள்ளியின் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் விவசாய பண்ணை தோட்டம், முயல் பண்ணை, ஈமு கோழி பண்ணை, கிண்ணிக் கோழிப் பண்ணை, அலங்கார மீன் பண்ணை உட்பட பல்வேறு பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் அறிவியல் தொடர்பான அனைத்து பாடங்களையும் செய்முறை வடிவில் படிக்கின்றனர். இதற்கிடையே பள்ளி வளாகத்தில் உள்ள விவசாய பண்ணை தோட்டத்தில் "சொலானம் மெலான்ஜினா" என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் கத்தரிக்காய் செடியில் ஒரே காம்பில் கைவிரல்கள் அமைந்திருப்பது போன்று நான்கு கத்தரிக்காய்கள் காய்த்துள்ளன. இந்த கத்தரிக்காயை மாணவ, மாணவிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். இந்த கத்தரிக்காய் பள்ளியின் ஆய்வகத்தில் மாணவர்களின் தொடர் கல்விக்காக பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.